×

இரண்டு கோயில்களை உடைத்து கொள்ளை: சிசிடிவி மூலம் வாலிபர் கைது; 15 கோபுர கலசங்கள் பறிமுதல்

ஆவடி: அம்பத்தூர் அடுத்த பாடி டி.எம்.பி நகர் சுந்தரர் தெருவில் பிரசித்திபெற்ற சிவா விஷ்ணு கோயில் உள்ளது. கடந்த 24ம் தேதி இரவு பூஜை முடிந்து கோயிலை நிர்வாகிகள் பூட்டிவிட்டு சென்றனர். பின்னர், நேற்று முன்தினம் காலை கோயிலை திறக்க குருக்கள் வந்துள்ளார். அப்போது, கோயிலில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு இருந்த 15 கோபுர கலசங்கள், பித்தளை குத்துவிளக்கு, தாம்பூலத்தட்டு உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதேபோல், பாடி மாரியம்மன் கோயில் தெருவில் மாரியம்மன் கோயிலிலும் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அங்கும் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் ஜீவானந்தம்(61), சுந்தரமூர்த்தி(52) ஆகியோர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது, கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களின் உருவம் தெரியவந்தது. விசாரணையில் திருமுல்லைவாயல் காந்தி நகர் 10வது தெருவை சேர்ந்த கவுதம்(18), அவரது கூட்டாளி அம்பத்தூரை சேர்ந்த விஷ்வா(20) ஆகியோர் என தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று காலை தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த கவுதம் என்பவரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர், அவரை கொரட்டூர் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் நண்பருடன் சேர்ந்து கொள்ளை செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 15 கோபுர கலசங்கள், குத்துவிளக்கு, தாம்பூலத்தட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து கவுதமை கைது செய்து வேறு ஏதும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய விஷ்வாவை தேடி வருகின்றனர்.

Tags : temples ,CCTV ,
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...