×

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அரியனூர் ஊராட்சியில் வாக்குச்சாவடி மையம்: பொதுமக்கள் வலியுறுத்தல்

செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, 800க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும், இளைஞர்கள், இளம்பெண்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உள்ளாட்சி தலைவர்களுக்கான தேர்தலின்போது மட்டுமே, இந்த ஊராட்சியில் தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.

ஆனால் நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அருகில் உள்ள நெசப்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்படுகிறது. அந்த நேரத்தில், அரியனூரை சேர்ந்த வாக்காளர்கள் நெசப்பாக்கம் ஊராட்சிக்கு சென்று வாக்களிக்கும் நிலை உள்ளது. இதனால், வாக்காளர்கள் பெரும் சிரமம் அடைவதுடன், பலர் வாக்களிக்காமலேயே விட்டு விடுகின்றனர். இதையொட்டி, 2 தேர்தலின்போதும் ஊராட்சியில் வாக்கு சதவீதம் குறைந்தே உள்ளது. குறிப்பாக, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வரும் சட்டமன்ற தேர்தலில், அரியனூர் ஊராட்சியில் வாக்கு சதவீதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இதனால், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் கூடுதாலாக வாக்குச்சாவடி மையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அரியனூர் ஊராட்சியில் தனி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அருகில் உள்ள நெசப்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று வாக்களிக்கிறோம். அந்த ஊராட்சி செல்ல, வயல்வெளியில் சுமார் 1 கிமீ தூரம் நடக்க வேண்டும்.

சாலை வழியாக செல்ல 2 கிமீ தூரம் நடந்து சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வேண்டும். இதனால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். வாக்களிப்பதற்காகவே, ஒரு நாள் முழுவதும் வீணாகிறது. மற்ற வீட்டு வேலைகளை கவனிக்க முடியவில்லை. தற்போது, கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் கூடுதலாக வாக்குச்சாவடி மையங்களை அமைக்க தயாராகி வருகிறது. இதையொட்டி, அரியனூர் ஊராட்சி உள்ள அரசு பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைத்தால், இங்குள்ள மக்கள் கொரோனா பரவல் அச்சமின்றி வாக்களிக்க முடியும். இதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Polling station ,urging ,assembly elections ,
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...