×

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தம்

சத்தியமங்கலம்,டிச.27: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவுடன் இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், விநாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீரை பயன்படுத்தி பாசன பகுதியில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 12ம் தேதியுடன் தண்ணீர் திறப்பு கெடு முடிவடைந்த நிலையில், தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும் என பாசனப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீண்டும் 16 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு நீடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (27ம் தேதி) காலை பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.70 அடியாகவும், நீர் இருப்பு 24 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் மொத்தம் 2100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு