×

கல்வித்துறை கலந்தாய்வில் இருவருக்கு பதவி உயர்வு


தர்மபுரி, டிச.27: தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இந்த கலந்தாய்வில், இளநிலை உதவியாளர்கள் இருவர், உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிகளில் 130 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடத்திற்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நிரப்பும் பணி நேற்று நடந்தது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்பேரில் நேற்று தர்மபுரி முதன்மைக்கல்வி அலுவலகத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கீதா தலைமையில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் இருந்து, உதவியாளர் பணியிடத்திற்கு, இருவர் பதவி உயர்வு பெற்றனர். அவர்களில் ஒருவர் பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியையும், மற்றொருவர் மொரப்பூர் வட்டார கல்வி அலுவலகத்தையும் தேர்வு செய்தனர். அவர்களுக்கு பணி ஆணை உடனே வழங்கப்பட்டது.

வாஜ்பாய் பிறந்த நாள் விழா
அரூர் பேருந்து நிலையத்தில், பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், முத்துசாமி, செந்தில்குமார், சரவணன், கலைச்செல்வி, சவுந்தர், பகலவன், ராஜசேகர், ராஜேந்திரன், அருண், கிருஷ்ணவேணி, பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கம்பைநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவிந்தராஜ், சூரியமூர்த்தி, சந்திரசேகர், ராதா மாரியப்பன், மாதையன், நரேஷ்குமார், அண்ணாமலை, அக்குமாரி, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், தர்மலிங்கம், காளியப்பன், கவியரசு, சங்கர், திருமுருகன் உள்ளிட்டோர் வாஜ்பாய் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

ஓய்வு அலுவலர்கள் சங்க கூட்டம்
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம், தலைவர் மாணிக்கம் தலைமையில் நடந்தது. மணி வரவேற்றார். ஹரிகிருஷ்ணன், கிருபானந்தன், மணி, தேவராஜன், சந்திரசேகரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், மருத்துவப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ₹1.5 லட்சமாக உயர்த்த வேண்டும், பொங்கல் கருணைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயபால் நன்றி கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, ஒரேநாளில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு,  தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாவட்டத்தில் மொத்தம் 6350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  6236 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரேநாளில் 14 பேர்  குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 61 பேர் சிகிச்சை பெற்று  வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 53 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மரக்கன்று நடும் விழா
பெரியார், அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் தி.க. தலைவர் வீரமணி பிறந்த நாளை முன்னிட்டு, கடத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்துத்துவா ஒரு பேராபத்து என்ற தலைப்பில் தி.க. மகளிரணி அமைப்பாளர் மதிவதனி பேசினார். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் சிவாஜி, மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா