×

ஆன்லைனில் நடைபெறும் என தகவல் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஜன.7ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் காமராஜ் பேட்டி


திருவாரூர், டிச.27: திருவாரூர் அருகே சொரக்குடியில் அரசின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள இடத்தினை அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் சாந்தா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், திருவாரூர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நன்னிலம் அடுத்த சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் சுமார் 10,000 தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் உயர் கல்வி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கிக் கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்ட உள்ளனர்.

இம்முகாமில் 18 முதல் 40 வயதிற்குட்பட்ட படித்துவிட்டு வேலை வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது சுயவிபரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். மேலும் https://thiruvarur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்தும் இம்முகாமில் பங்கேற்கலாம். திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Tags : Kamaraj ,interview ,
× RELATED ஒட்டன்சத்தித்தில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு