×

பயோ மெட்ரிக் முறையில் சர்வர் பிரச்னையை தீர்க்க கோரி ரேஷன் கடை பணியாளர்கள் மனு

திருவாரூர், டிச.27: மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த திட்டம் பயோமெட்ரிக் முறையில் செயல்படுத்த துவங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சர்வர் பிரச்னை காரணமாக பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனையடுத்து சர்வர் பிரச்னை ஏற்படும் இடங்களில் பழைய முறைப்படி ஸ்மார்ட் கார்டு முறையில் பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.2,500 ரொக்கம் மற்றும் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயோமெட்ரிக் முறையில் சர்வர் பிரச்னை காரணமாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்பதால் சர்வ பிரச்னையை சரிசெய்ய கோரி ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் இதற்கான பாயிண்ட் ஆப் சேல் எனப்படும் (பி.ஓ.எஸ் )மிஷினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இந்த பி.ஓ.எஸ் மிஷின் ஒப்படைக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று காலை திருவாரூர் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் ஹரிஹரன் தலைமையில் தங்களது மிஷினுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு வந்தனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் பழைய முறைப்படி ஸ்மார்ட் கார்டில் ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து இந்த மிஷின் ஒப்படைக்கும் போராட்டத்தை தவிர்த்து பயோமெட்ரிக் முறையில் ஏற்படும் சர்வர் பிரச்னைகளை சரிசெய்து 4 ஜி சிம் கார்டு வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளித்தனர்.

Tags : ration shop employees ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்