கும்பகோணம் கொட்டையூரில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி மக்கள் சாலை மறியல்

கும்பகோணம், டிச.27: கும்பகோணம் கொட்டையூரில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றகோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் கொட்டையூர் மெயின் ரோடு சாலையில் உள்ள பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் மனு அளித்தனர். ஆனால் நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற கோரியும் கொட்டையூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மேற்கு இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories:

>