×

மண் வளத்தை மேம்படுத்த மண் புழு உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஜெயங்கொண்டம், டிச.27:மண் வளத்தை மேம்படுத்த மண் புழு உரங்களை உபயோகிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நெட்டலக்குறிச்சி கிராமத்தில் விவசாய ஆர்வலர் குழுக்களுக்கான திறன்வளர் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்திய வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி கூட்டுப் பண்ணைய விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் சாகுபடி செய்தல், இடுபொருட்களை கூட்டுக்கொள்முதல் செய்தல் மற்றும் வேளாண்மைத் துறையில் செய்லபடுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

மேலும் மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் மண்புழு உரம், அங்கக உரங்களை பயன்படுத்தும்மாறு கேட்டுக்கொண்டார். ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலட்சுமி விவசாயிகள் ஊடுபயிர், வரப்பு பயிர் மற்றும் மரப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் அடையலாம் என்றார்.  வேளாண்மை அலுவலர் ராதிகா விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத்திட்டம் குறித்து விளக்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி செய்யும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில் நுட்பங்களான கோடை உழவு செய்தல், டிரைக்டோடர்மா விரிடி மற்றும் உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்தல், ஏக்கருக்கு 5 கிலோ நுண்சத்து உரமிடல், நிலக்கடலை ரிச் தெளிப்பதன் மூலம் பூக்கும் திறன் மற்றும் காய் பிடிக்கும் திறனை அதிகப்படுத்துதல், இயற்கை முறையில் பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த உளுந்து அல்லது தட்டைப்பயிறு ஊடுபயிர் சாகுபடி செய்தல், இனக்கவர்ச்சி பொறிகள் உபயோகப்படுத்துதல், பறவை இருக்கைகள் அமைத்தல் முதலிய தொழில்நுட்பங்களை பின்பற்றிடுமாறு வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி கேட்டுக்கொண்டார். மேலும் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags :
× RELATED ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு 1500 டன் பச்சரிசி மூட்டைகள் வந்தது