×

அரியலூரில் வேகமாக பரவும் ஆட்டுகொல்லி நோயை தடுக்க வழிமுறைகள்

தா.பழூர், டிச.27: அரியலூரில் மாவட்டத்தில் ஆடுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆடுகள் விவசாயிகளின் நடமாடும் வங்கி என அழைக்கப்படுகிறது. ஆடுகளைத் தாக்கும் நச்சுயிரி நோய்களில் ஒன்று ஆட்டுக் கொல்லி நோய். மழைக்காலம் முடிந்த பிறகு தற்போது நிலவி வரும் குளிர்காலத்தில் இந்த நோய் பரவுதல் அதிகமாக இருக்கும். இந்த நோய் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டு இனங்களை தாக்கக்கூடியது. வெள்ளாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்த நோய் முதன் முறையாக 1987ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர் என்னும் கிராமத்தில் கண்டறியப்பட்டது.

இந்த நோய், நோய் வாய்ப்பட்ட ஆடுகளிலிருந்து காற்றின் மூலமாகவும், மூக்கில் இருந்து வழியும் சளி மற்றும் கண்களில் இருந்து வரும் கண்ணீர் மூலமாகவும், தீவனப் பொருட்கள் மற்றும் பண்ணையிலுள்ள வண்டி வாகனங்கள் மூலமாகவும், சந்தை மூலமாகவும் ஒரு பண்ணையில் இருந்து மற்ற பண்ணையில் உள்ள ஆடுகளுக்கு இந்நோய் பரவும். நோய் தாக்கம் ஏற்பட்ட ஆடுகளில் முதல் 8 நாட்களில் காய்ச்சல் காணப்படும். தீவனம் உண்ணாமை, கண் சவ்வு அழற்ச்சி, கண் மற்றும் மூக்கிலிருந்து சளி போன்ற திரவம் ஒழுகுதல், வாய் உட்பகுதி மற்றும் பல் ஈறுகளில் அழற்ஜி ஏற்பட்டு புண்கள் தோன்றும், வயிற்றுப் போக்கு காணப்படும். நுரையீரல் தாக்கம் மற்றும் மூச்சு குழலில் தாக்கம் ஏற்பட்டு கடைசியில் இறப்பு ஏற்படும். சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படும், ஆட்டுக்குட்டிகளில் அதிகமாக காணப்படும். வெள்ளாடுகளில் இறப்பு விகிதமானது 85 சதவிகிதமாகவும் செம்மறி ஆடுகளில் 10 சதவிகிதமாகவும் காணப்படும் .

இந்த நோயை தடுக்க, நோயற்ற ஆடுகளை நோய் ஏற்பட்ட ஆடுகளிலிருந்து தனியாக பிரித்து முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும். புதிதாக ஆடுகளை சந்தையில் இருந்து வாங்கியவுடன் பண்ணையில் உள்ள மற்ற ஆடுகளுடன் சேர்க்காமல் தனியாக பிரித்து வைத்து நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதனை கவனிக்க வேண்டும். பண்ணையில் உள்ள சாணங்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இறந்த ஆடுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். நோய் தாக்கிய ஆடுகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். முக்கியமாக நோய் தோன்றுவதற்கு முன்பு (மழை காலத்திற்கு முன்) மூன்று மாதத்திற்கு மேல் உள்ள அனைத்து ஆடுகளுக்கும் ஆட்டுகொல்லி நோய் தடுப்புசியினை வருடம் ஒரு முறை தவறாமல் போட்டு ஆடுகளை ஆட்டுகொல்லி நோய்களில் இருந்து பாதுகாத்து இலாபம் பெறுமாறு சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம கால்நடை மருத்துவர் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...