×

கொரோனா பரிசோதனை முடிவை திரும்பபெறக்கோரி திருநள்ளாறில் கடையடைப்பு, சாலைமறியல்

காரைக்கால், டிச.27: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை ரிசல்ட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வணிகர்கள் நேற்று கடையடைப்பு செய்தனர். மேலும் கோயில் அருகில் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருநள்ளாறு வெறிச்சோடியது. காரைக்கால் திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் இன்று (27.12.2020) அதிகாலை 5:22 மணிக்குசனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படுவது வழக்கம். இன்று தினத்தில் சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் 48 மணி நேரத்திற்குள்ளாக கொரோனோ பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் கொண்டுவந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்கிற அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியானது. இதன் காரணமாக பக்தர்களும், திருநள்ளாறு பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி துணைநிலை ஆளுநரின் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென்றும், கொரோனா விதிமுறைகளை தளர்த்தி பக்தர்களை அதிகளவில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி திருநள்ளாறு பகுதி வணிகர்கள் நேற்று (26ம் தேதி) கடையடைப்பு செய்தனர். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பிஆர். சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணி உள்ளிட்டோர் தலைமையில் திருநள்ளாறு கோயிலுக்கு அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்து அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நண்பகலுக்கு மேல் திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தனும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

ஒவ்வொரு முறையும் சனிப்பெயர்ச்சி அன்று உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சனீஸ்வரன் கோயிலுக்கு வந்து கூடுவார்கள். இதன் காரணமாக திருநள்ளாறில் உள்ள வர்த்தகர்கள், சிறு குறு வணிகர்கள் வருமானம் காண்பர். இதேபோல கோயிலுக்கும் லட்சக்கணக்கில் வருமானம் வரும். ஆனால் இந்தமுறை சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய திருநள்ளாறால் வணிகர்கள் சிறு , குறு வியாபாரிகள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே அறிவித்தபடி கடையடைப்பு நடத்திய திருநள்ளாறு வணிகர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் . இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு திமுக காங்கிரஸ் இதேபோல எதிர்க்கட்சிகளை சேர்ந்த என் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன.

Tags : Thirunallar ,withdrawal ,
× RELATED பிரமோற்சவ விழாவின்போது திருநள்ளாறு...