உதயநிதி ஸ்டாலினிடம் விவசாயிகள் மனு வரத்து வாய்க்கால்கள் இல்லாததால் அதிக மழை பொழிந்தும் தண்ணீர் நிரம்பாத யமுனேரி

தா.பழூர், டிச. 26:வரத்து வாய்க்கால்கள் இல்லாததால் அதிக மழை பொழிந்தும் யமுனேரியில் தண்ணீர் நிரம்பாததால் தா.பழூர் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ளது யமுனேரி. இந்த ஏரி தண்ணீரை தா.பழூர் ஊராட்சி மற்றும் சிந்தாமணி ஊராட்சி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடந்த காலங்களில் 40 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கி குட்டைபோல தற்போது காட்சியளிக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காணப்பட்டது.பல வருடங்களாக இந்த ஏரியை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்து தூர்ந்து போய் கிடந்தது. இதுகுறித்த செய்திகள் பலமுறை தினகரன் நாளிதழில் வெளியானது. இதனை தொடர்ந்து முன்னால் மாவட்ட கலெக்டர் ஏரியை தூர்வார பூமி பூஜை நடத்தினார். பின்னர் கலெக்டர் மாற்றத்தால் கிடப்பில் கிடந்தது.

இந்நிலையில், சமீபத்தில் குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரியில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றது. அரசு நிர்ணயித்த ஆழத்தை விட மிக அதிக ஆழத்திற்கு ஏரியில் மண் தோண்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இங்கு எடுக்கப்பட்ட மண், கும்பகோணத்தில் நடைபெறும் சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த ஏரியை ஆரம்பகாலத்தில் இருந்து இரு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களும் பொதுவாக பயன்படுத்தி வந்தனர். சிந்தாமணி மக்கள் வடக்கு புறம் உள்ள படித்துறையையும், தா. பழூர் பகுதி பொதுமக்கள் தெற்கு புறத்திலுள்ள படித்துறையையும் பயன்படுத்தி வந்தனர்.

ஏரியை இரண்டு ஊருக்கும் ஆளுக்கு பாதி என்று நடுவில் பிரித்து கரை அமைத்ததால், சமீபத்தில் பெய்த கனமழையின் போது கூட இந்த ஏரியில் நீர் நிரம்பவில்லை. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 69 பெரிய நீர்நிலைகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன. ஆனால் இந்த யமுனேரி முழங்கால் அளவு கூட தண்ணீர் இல்லை.குடிமராமத்து பணியின்போது வரத்து வாய்க்கால்கள் எதையும் சீர் செய்யாததே இதற்கு காரணம் என்கின்றனர். ஏரியின் நடுவே உருவாக்கப்பட்ட மண் சுவரை அகற்றி அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் சமமாக இருந்தால் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>