×

பருவமழை காலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் – தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் முக்கிய சேவைத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; பருவமழை காலங்களில் ஆண்டுக்கு பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பருவமழை காலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

பருவமழை காலங்களில் நடத்தப்படும் மருத்துவ முகாம்கள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மிக்ஜாம் புயலின்போது, 11,000-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தியதில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். மழைக் காலங்களில் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. இதில், ஏ டி எஸ் வகை கொசு உற்பத்தியை தடுப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஜனவரி முதல் தற்போது வரை டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி முதல் தற்போது வரை 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறோம். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அரசின் நடவடிக்கையால் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு; வெள்ளத் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மழைநீர் வடிகால் பணிக்கு தமிழ்நாடு அரசு அதிகமாக செலவு செய்திருக்கிறது. வருகிற மழைக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அனைத்து வேலைகளையும் சரியாக செய்யும். மழைக்காலத்திற்கு முன்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஏற்கெனவே அறிவித்த மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. புதிதாக தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Tamil Nadu ,Northeast Monsoon ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...