×

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தர்மபுரி, டிச.26: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கிறிஸ்தவர்கள் உரிய சமூக இடைவெளியுடன் பங்கேற்று, உலக மக்களின் நன்மைக்காக வேண்டிக் கொண்டனர். உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அன்னசாகரத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் நேற்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், தர்மபுரி சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்திலும் அருட்தந்தை பிரபு சந்திரமோகன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும், நல்லம்பள்ளி கோவிலூர், மாட்லாம்பட்டி, காரிமங்கலம் கிறிஸ்தவ ஆலயம், கடகத்தூர், செல்லியம்பட்டி, மாரண்டஅள்ளி, பி.பள்ளிப்பட்டி உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அரூர்: அரூர் கச்சேரி மேட்டில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில், நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்ற பிரார்த்தனையில் கிறிஸ்தவ மக்கள் திரளாக பங்கேற்று கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு உலக மக்களின் நன்மைக்காக வேண்டிக் கொண்டனர். பங்கு தந்தைகள் ஜான்பால், இக்னேசியஸ், பால்பெனடிக்ட் ஆகியோர் ஆசி வழங்கினர். இதேபோல், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லூர் பகுதியில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

Tags : churches ,Christmas ,
× RELATED தேவாலய பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம்