தடையை மீறி மக்கள் கிராம சபை கூட்டம் மாமன், மச்சான் கொள்ளையடிக்கும் குடும்ப ஊழல் கட்சி அதிமுக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்

மரக்காணம், டிச. 26: மாமன், மச்சான் கொள்ளையடிக்கும் குடும்ப ஊழல் கட்சியாக அதிமுக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.  விழுப்புரம்  மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி 12வது வார்டு செல்லியம்மன் கோயில் தெருவில் திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு,  விவசாயிகள், உப்பள தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளை  கேட்டறிந்தார்.  இதற்கிடையே மரக்காணத்தில்  கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். ஒவ்வொரு ஆண்டும்  ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம்  நடத்தப்படும். மற்ற நாட்களில் நடத்த அனுமதியில்லை எனவும், மீறினால்  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான நோட்டீசை  மாவட்ட செயலாளர் ெசஞ்சி மஸ்தானிடம் மரக்காணம் போலீசார் வழங்கினர்.இருப்பினும்  பெண்கள் அணி அணியாக திரண்டு வந்தனர். இதனால் எதிர்ப்பார்த்த கூட்டத்தை விட  பன்மடங்கு கூட்டம் கூடியது.

கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டனர்.திட்டமிட்டபடி மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து  கொண்டார். அவருக்கு பூக்களை தூவியும், பூரண கும்ப மரியாதை அளித்தும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பெண்கள்  மற்றும் பொதுமக்களிடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர்  ஆலமரத்தின் கீழ் மக்கள் கிராம சபை கூட்டத்தை துவக்கி வைத்து மு.க.ஸ்டாலின்  பேசியதாவது: இந்த மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த கூடாது என  பல்வேறு வகையில் தடையை ஏற்படுத்தினார்கள். இங்கு கூடும் கூட்டத்தை  பார்த்து எடப்பாடி பழனிச்சாமி தூக்கத்தை தொலைத்ததோடு பயந்து போய்  இருக்கிறார். மோடியே வந்தாலும் இந்த கிராம சபை கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. இந்த பெயர் மாற்றம் கூட யாருக்கும்  பயந்துகொண்டு செய்யவில்லை. கிராம சபை கூட்டங்கள் வாயிலாக மக்களை சந்திக்க வேண்டும். மக்களை பற்றி கவலைப்படாத இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்.

ஆயிரக்கணக்கில் பெண்கள்  திரண்டிருக்கிறீர்கள் என்றால், ஒரே முடிவோடு இந்த ஆட்சியை தூக்கி  வீச வந்திருக்கிறீர்கள். எடப்பாடி தன்னுடைய உறவினர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கொடுத்ததில் ஊழல் நடந்திருப்பதாக  உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது.  பழனிச்சாமி முதல்வராக இருப்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியது. உத்தரவை அமல்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெற்றார்.

இன்னும் 4 மாதங்களுக்கு பிறகு அந்த தடையை திமுக உடைத்துவிடும். அமைச்சர்கள் சொத்து வாங்கி குவித்திருக்கின்றனர்.  நிலைமை இப்படி  இருக்க எடப்பாடி பழனிச்சாமி திமுகவை பார்த்து, ஊழல் கட்சி, குடும்ப கட்சி என்று போகிற இடத்தில் எல்லாம்  பேசி வருகிறார். திருடனாக,  ஊழல்வாதியாக இருந்து கொண்டு திமுகவை பார்த்து ஊழல் கட்சி என்று சொல்கிறார். திமுக  மீதான சர்க்காரியா கமிஷன் ஊழலை நிரூபிக்க முடியவில்லை. ஆ.ராசா, கனிமொழி  மீதான வழக்குகளை எதிர்கொண்டு ெவளியே வந்திருக்கின்றனர்.ஊழல் வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டு, 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100  கோடி அபராதமும்  ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்டது. அவர் இறந்ததால்தான் அவர் பெயர்  விடுவிக்கப்பட்டது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் எங்கே  இருக்கிறார்கள் எல்லோருக்கும் தெரியும்.  ஊழல் வழக்கில் தண்டனை ெபற்றது  அதிமுகதான். திமுக தலைவர்கள் யாராவது  ஊழல் வழக்கில்  இதுவரை தண்டனை பெற்றுள்ளனரா?

வாரிசு  அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். 13 வயதில் மாணவனாக இருந்தபோதே இயக்கத்தில்  இணைந்து பணியாற்றி வருகிறேன். நேரடியாக வந்துவிடவில்லை. படிப்படியாக தான்  இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி உறவினர்கள் மாமன், மச்சான், சம்மந்தி என எல்லோரும் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றனர். அரசியல் குடும்ப கட்சியாக  இருக்கலாம், அதிமுகவை போன்று ஊழல் குடும்ப கட்சியாக இருக்க கூடாது. கலெக்ஷன்,  கமிஷன், கரப்ஷன்கள் இதுதான் இந்த ஆட்சியின் கொள்கையாக இருக்கிறது. தேர்தல் விரைவில் வர இருக்கிறது. தமிழக மக்களும் இந்த ஆட்சியை எப்போது விரட்டுவீர்கள்? என்று கேட்கிறார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக தொடர்ந்து  மக்களுக்காக பயணிக்கிறது. மக்களுக்காக மறியல் செய்து உண்ணாவிரதம் இருந்து சிறைக்கு போனோம். எனவே சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்து நாம் மகத்தான வெற்றிப்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>