தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை குமரி முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்

நாகர்கோவில், டிச.26: குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை  உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது. தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை  நேற்று கொண்டாடப்பட்டது.  குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன. நடப்பாண்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு பெற்றுள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நேற்று முன் தினம் நள்ளிரவில் கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் நசரேன் சூசை பங்கேற்றார். கொரோனா விதிமுறை காரணமாக ஆலயத்துக்குள் குறைவானர்களே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். ஆலயத்துக்கு வெளியே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் பிரார்த்தனை செய்தனர். சிறப்பு பிரார்த்தனையில் பங்கு பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் பரிமாறிக்கொண்டனர். இதே போல் நேற்று காலை கோட்டார்  பேராலயத்தில், பங்கு தந்தை ஸ்டான்லி சகாயசீலன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதிலும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

குழித்துறை மூவொரு இறைவன் தேவாலயத்திலும் நேற்று முன் தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலையில் நடந்த சிறப்பு பிரார்த்தனைளில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி சி.எஸ்.ஐ., பிஷப் செல்லையா தலைமையில் ஆலங்கோட்டை சிஎஸ்ஐ சபையில் நேற்று காலையில் 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு தேவாலயங்களிலும் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடினர்.  கிறிஸ்து பிறப்பையொட்டி நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணியளவில் வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டன. கிறிஸ்துமசையொட்டி பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடந்தன. முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்கள், வீடுகளில் இயேசு  கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான குடில்கள், ஒளிரும் வண்ண வண்ண  நட்சத்திரங்கள், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு  இருந்தன. தேவாலயங்களில் கண்ணை கவரும் விதத்தில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. புத்தாண்டு வரை இந்த மின் விளக்கு அலங்காரங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

Related Stories:

>