×

லண்டனில் இருந்து குமரி திரும்பிய மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை புதிய வகை தாக்குதலால் அச்சம்

நாகர்கோவில், டிச.26 : லண்டனில் இருந்து குமரி மாவட்டம் வந்த மேலும் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.  உருமாறி தீவிரமாக பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனாவால் உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் மூழ்கி உள்ளன. இதனால் பிரான்ஸ், ஜெர்மனி, உள்ளிட்ட 10க்கும் அதிகமான நாடுகளில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பி வருகிறவர்கள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். குறிப்பாக பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்துதலில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்துள்ளது. 300 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா தாக்கி வருவதை தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கண்காணிக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், லண்டனில் இருந்து இதுவரை 4 பேர் வந்துள்ளனர். திருவனந்தபுரம் வந்து, இவர்கள் நாகர்கோவில் வந்தனர்.
இவர்களில் 2 பேர் 14 நாட்களுக்கு முன்பும், 2 பேர் 5 நாட்களுக்கு முன்பும் வந்துள்ளனர். அவர்களிடம் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தொற்று ஏதும் இல்லை. இருப்பினும் வீட்டில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர தற்போது மேலும் 6 பேர் இங்கிலாந்தில் இருந்து குமரி மாவட்டம் வந்துள்ளனர்.  இவர்கள் அனைவருக்கும முதற்கட்ட பரிசோதனை முடிந்துள்ளது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். இருப்பினும்  இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 2 கட்ட, 3 கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.  மேலும் பிரிட்டனில் இருந்து அரேபிய நாடுகள் வழியாக வந்த விமானத்தில் வந்திறங்கிய வகையில் 140 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா பரிசோதனைக்கும் அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு  கொண்டாட்டங்களுக்காக அதிகம் பேர் வருவார்கள். இதனால் குமரியில் மீண்டும் கொரோனா பீதி தொற்றி உள்ளது.

Tags : London ,Kumari ,
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...