×

ஆள் கடத்தல், ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் அதிமுக மாஜி எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சிவகாசி சக்தி நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கம்மாபட்டி ரவிச்சந்திரன். இவர் கடந்த 2018ல் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, ஐ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வேண்டுராயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை நடத்தி வந்தார். இதன் பிறகு 2019 செப்டம்பர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்ட மூவரும் தொழிலில் இருந்து விலகினர். இந்த நிலையில், கடந்த 2019 அக்டோபர் மாதம் தன்னை கடத்தி 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக, ராஜவர்மன் உள்ளிட்டோருக்கு எதிராக ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுக நிர்வாகி தங்கமுனியசாமி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் ஐ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 6 பேர் மீதும் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2024 பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ராஜவர்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை ரத்து செய்து, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ராஜவர்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு வில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜவர்மன் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. மனுவுக்கு நவம்பர் 4க்குள் சிவகாசி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Tags : AIADMK MLA ,Madras High Court ,Chennai ,Businessman ,Kammapatti Ravichandran ,Sivakasi Shakti Nagar ,Vendurayapuram ,AIADMK MLAs ,Sattur ,Rajavarman ,Thangamuniyasamy ,I. Ravichandran ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...