புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி தலைமை நீதிபதியை நோக்கி வீசி எறிய முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த வழக்கறிஞரை மடக்கி பிடித்து நீதிமன்ற அறையிலிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அந்த வழக்கறிஞர், ‘‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை நாங்கள் பொறுக்க மாட்டோம்’’ என கத்தியபடி சென்றார்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அமைதியாக இருந்த தலைமை நீதிபதி கவாய், ‘‘இதற்கெல்லாம் கவனத்தை திசை திருப்ப வேண்டாம். எங்கள் கவனம் திசை திரும்பவில்லை. இவையெல்லாம் என்னை பாதிக்காது’’ என்றபடி வேலையை தொடர்ந்தார். சம்பவம் தொடர்பாக வழக்கறிஞரிடம் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் ராகேஷ் கிஷோர் (வயது 71), டெல்லி மயூர் விஹாரை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் எதற்காக ஷூவை கழற்றி வீச முயன்றார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்படவில்லை. தலைமை நீதிபதி உத்தரவின் பேரில் மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் பதிவை டெல்லி பார் அசோசியேஷன் ரத்து செய்துள்ளது.
கடந்த 3 வாரத்திற்கு முன்பாக, வழக்கறிஞர் ராகேஷ் தலால் என்பவர் மபியில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றான கஜூராஹோ கோயில் வளாகத்தில் உள்ள விஷ்ணு சிலையின் தலை துண்டித்துள்ளதாகவும் அதை சீரமைக்க உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி, ‘‘உங்கள் கடவுளிடமே சென்று சிலையை சரி செய்ய கேட்டு வேண்டிக் கொள்ளுங்கள்’’ என உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் ஷூவை வீச முயன்றிருப்பதாக கூறப்படுகிறது.
⦁ ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது
நீதிமன்ற அறையில் தாக்குதல் முயற்சியைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை பிரதமர் மோடி நேற்று தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயிடம் பேசினேன். உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு இடமில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். நீதியின் மதிப்புகள், நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை இது காட்டுகிறது’’ என்றார்.
⦁ வெறுப்பு ஆழமாக ஊடுருவியுள்ளது
தலைமை நீதிபதி மீதான ஷூ வீச்சு முயற்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை தாக்கும் முயற்சி முன்னெப்போதும் இல்லாதது, வெட்கக்கேடானது, வெறுக்கத்தக்கது. நமது நீதித்துறையின் கண்ணியம், சட்டத்தின் ஆட்சியின் மீதான தாக்குதல் இதுபோன்ற முட்டாள்தனமான செயல், கடந்த 10 ஆண்டுகளில் வெறுப்பு, வெறி, மதவெறி எவ்வாறு நமது சமூகத்தை ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை காட்டுகிறது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். நமது நீதித்துறையின் பாதுகாப்பு மிக முக்கியமானது ’’ என கூறி உள்ளார். இதேபோல், பல அரசியல்கட்சி தலைவர்கள், வக்கீல் சங்க நிர்வாகி்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
