×

சாத்தூர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சாத்தூர், டிச.26:  சாத்தூர் பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. நேற்று காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. சாத்தூர் பெருமாள் கோயிலில் வைப்பாற்றில் அழகர் இறங்குதல், ஆனி தேரோட்டம் மிக முக்கியமான திருவிழாவாகும். அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாதம் தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து, இராப்பத்து  உற்சவம் வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு டிச.15ம் தேதி தொடங்கி 24ம் தேதி நேற்று முன்தினம் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்தது. இராப் பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா முழக்கத்துடன் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள், தொடர்ந்து பூதேவி, ஸ்ரீதேவி எழுந்தருளினர். வருடம் ஒரு முறை மட்டுமே இந்த பரமபத வாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று திறக்கப்பட்ட இந்த பரமபத வாசல் வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்கு சென்று வருவதாக ஐதீகம். எனவே, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். மேலும் நேற்று முதல் இராப் பத்து எனும் உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். டிச.26ம் தேதி தொடங்கி ஜன.2ம் தேதி வரை முக்கிய நிகழ்வான மார்கழி நீராட்டு உற்சவம்(எண்ணெய் காப்பு உற்சவம்) நடைபெற உள்ளது.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டகபடி உபயதாரர்கள் சார்பில் செய்திருந்தனர். கோயில் தக்கார் சுமதி, நிர்வாக அதிகாரி தனலட்சுமி மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Heaven Gate Opening ,Sattur Perumal Temple ,
× RELATED வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழா;...