×

கிறிஸ்துமஸ் விடுமுறை எதிரொலி களை கட்டிய சுற்றுலாத்தலங்கள்

ஊட்டி, டிச.26: கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் விடுமுறை வந்த நிலையில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை நாட்கள் என 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்த நிலையில், இந்த விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் முதலே ஊட்டிக்கு வர துவங்கினர். கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் இ-பதிவு முறையில் பதிவு செய்து விட்டு ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக கடந்த இரு நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக நகரின் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, கூடலூர் சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று பகலில் இதமான காலநிலை நிலவியதால் ஊட்டி படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள். இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tourist sites ,holidays ,Christmas ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...