×

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நள்ளிரவில் பைக் ரேசில் ஈடுபட்ட 225 பேர் மீது வழக்குப்பதிவு: சாகசத்தில் ஈடுபட்டவர்களின் 20 பைக்குகள் பறிமுதல்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால், தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சாந்தோம் தேவாலயத்தில் பொதுமக்கள் அதிகாலை வரை வழிபாடு நடத்தியதால்  காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், வாலிபர்கள் சிலர் நள்ளிரவில் உற்சாக மிகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, அடையாறு மற்றும் ராஜிவ்காந்தி சாலைகளில் பைக் ரேசில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, 100க்கும் மேற்பட்ட வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களில் 175 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூராக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், 50 பேர் மீது சாலையில் அபாயகரமாக வாகனம் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒரே நாள் இரவில் ஆங்காங்கே நடந்த சோதனையில் மொத்தம் 225 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் சாகசத்தில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து 20 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் தேனாம்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு, அண்ணாசாலை காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் அனைத்தும் 15 நாட்களுக்கு பிறகே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வாகன சோதனை சென்னை முழுவதும் வரும் 1ம் தேதி வரை நீடிக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த வாகன ஓட்டிகள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : bike race ,festivities ,adventure ,Christmas ,
× RELATED டூவீலர் துணிகர திருட்டு