×

கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

* எல்இடி திரைகளில் கண்டுகளித்த பக்தர்கள் * 5 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம்

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராபத்து முதல் நாளான நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  இதையொட்டி அதிகாலை 3 மணியளவில் இருந்து 4 மணி வரையில் விஸ்வரூபம்,  அலங்காரம் மற்றும் தனூர் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் 4.15 மணி வரை மகா மண்டபத்தில் இருந்து உற்சவர் வைர அங்கி சேவையில் காட்சியளித்தார்.  தொடர்ந்து 4.16 மணிக்கு  உற்சவர் மகா மண்டபத்தில் இருந்து உள்பிரகாரம் வழியாக வலம் வந்து அதிகாலை  4.30 மணிக்கு சொர்க்கவாசல் வந்தடைந்தார். பின்னர் 4.30 மணிக்கு  சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, எதிரே எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாருக்கு  காட்சி தந்தார்.

 இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால், கோயில்களின் மாட வீதியில் வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் சொர்க்கவாசல் திறப்பை  பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா  என பக்தியுடன் முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து, வேதம் தமிழ் செய்த மாறன், மாறன்  சடகோபன், நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யும் விதமாக, ஏகதிவ்ய பிரபந்தம்  தொடங்கியது. காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை வரை திருவாய் மொழி மேல்  மண்டபத்தில் உள்ள புண்ணியகோடி மண்டபத்தில் வைர அங்கியுடன் உற்சவர்  எழுந்தருளினார்.  முன்னதாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை ஒட்டி, அதிகாலை 4 மணி முதலே கடும் குளிரையும்  பொருட்படுத்தாமல் கோயிலுக்கு வெளியே பக்தர்கள்  காத்திருந்தனர்.  காலையில் 6 மணிக்கு இலவச முன்பதிவு செய்த 3000 பேர் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக  குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள வரிசையில் மட்டும் கோயிலுக்குள்  அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் வரை மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 மேற்கு கோபுர வாசல் வழியாக காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை தெற்கு மாடவீதி வழியாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில் ரூ.100 கட்டண டிக்கெட் பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேற்கு கோபுர வாசல், பேயாழ்வார் கோயில் தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள வரிசையில், பரமபத வாசல் தரிசனம் செய்ய காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். இதே போன்று மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோயில், சவுகார் பேட்டை தாமோதர பெருமாள் கோயில் உட்பட சென்னையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பை ஓட்டி ஏராளானோர் தங்களது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : sky ,Parthasarathy Temple ,
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...