×

காட்சி பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வாலாஜாபாத்: சுகாதாரமான தண்ணீர் மக்களுக்கு கிடைக்க 6 இடங்களில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்படாமல், காட்சி பொருளாக உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாலாஜாபாத் பாலாற்று படுகையிலிருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம், பேரூராட்சி மக்களுக்கு தினமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கோடைகாலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையை கருத்தில் கொண்டு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி சார்பில், 6 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்தது. ஆனால், இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வாலாஜாபாத் பேரூராட்சியில் சுழற்சி முறையில் பாலாற்று குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கோடைகாலங்களில் முறையாக விநியோகிக்க படாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சிக்கு உட்பட்ட 6 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பெயரளவில் அதிகாரிகள் அமைத்து வைத்தனர்.

இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் கோடை காலங்களில் ஏற்படும் தட்டுப்பாட்டை போக்க, இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் பிரச்னையை தீர்க்கலாம். ஆனால், அதனை காட்சிப் பொருளாகவே வைத்துள்ளனர். மேலும், பாலாற்று படுகையில் பைப்லைன் உடைப்பு, பழுது உள்பட பல பிரச்னைகள் ஏற்படும்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மக்களின் பயன்பாட்டில் இருந்தால், பாலாற்று குடிநீரை எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றனர். பல லட்சங்கள் செலவு செய்து ஏற்படுத்திய சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : Drinking water treatment plant ,
× RELATED கமுதி அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு