×

கம்பெனிக்குள் புகுந்து ஊழியர்களிடம் கத்திமுனையில் செல்போன்கள் பறிப்பு: பிரபல ரவுடி கைது

ஆவடி: ஆவடியை அருகே அயப்பாக்கத்தில் நள்ளிரவில் கம்பெனிக்குள் புகுந்து செல்போன்களை பறித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர், ஐ.சி.எப் காலனி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜோசப் (53). இவர், ஆவடி அருகே அய்யப்பாக்கம்- திருவேற்காடு சாலை அபர்ணாநகர் பகுதியில் \”ஹாலோ பிளாக்\” கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் வடமாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் கம்பெனிக்குள் அறையை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, ஒரு மர்ம நபர் கம்பெனிக்குள் புகுந்துள்ளார். பின்னர், அவர் பூட்டி இருந்த அறையை தட்டி உள்ளார். சப்தம் கேட்டு இரு ஊழியர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து கதவை திறந்துள்ளனர்.

அப்போது, மர்ம நபர் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பின்னர், மர்ம நபர் அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளார். இது குறித்து ஜோசப் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் செய்தார். எஸ்.ஐ விஜயகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, வழிப்பறியில் ஈடுப்பட்டது அயப்பாக்கம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி கணேஷ்(20) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த கணேஷை நேற்று மாலை கைது செய்தனர்.

Tags : company ,Celebrity Rowdy ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...