எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சியில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்

தாம்பரம்: அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று நடந்தது. அப்போது, அங்கு வந்த நகர செயலாளர் கூத்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் வெற்றியிடம், ‘‘நான் பணம் பெற்றுக்கொண்டு தான் உனக்கு பொறுப்பு வழங்கினேன், என நிர்வாகி ஜெகஜீவன்ராமிடம் தெரிவித்து இருக்கிறாய். நான் எப்போது உன்னிடம் பணம் வாங்கினேன்,’’ எனக் கேட்டு வாக்குவாதம் செய்தார். அதற்கு வெற்றி, நான் அப்படி கூறவில்லையே என்று தெரிவித்ததுடன், அங்கிருந்த ஜெகஜீவன்ராமிடம், இதுகுறித்து கேட்டார். இதன் காரணமாக, இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதனையடுத்து தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் கோபிநாதன், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தாம்பரம் நகர செயலாளராக வெற்றி என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர் தாம்பரம் நகர முன்னாள் துணைத் தலைவர் கோபிநாதன் அணியை சேர்ந்தவர். ஆனால், தாம்பரம் நகர அதிமுக செயலாளர் கூத்தன் அணியை சேர்ந்த ஜெகஜீவன்ராமுக்கு தான் இந்த பொறுப்பு கிடைத்திருக்க வேண்டும். இந்நிலையில், நகர செயலாளர் கூத்தன் பணம் பெற்றுக் கொண்டுதான் தனக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பை வழங்கியதாக ஜெகஜீவன்ராமிடம் வெற்றி கூறியதாக தெரிகிறது. இந்த விஷயம் கூத்தனுக்கு தெரிய வர தற்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் காசிராஜனிடம், அதிமுகவினர் பலமுறை தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காததே, இந்த மோதலுக்கு காரணம்,’’ என்றார்.

Related Stories:

>