×

சென்னை தொழிலதிபரிடம் பெண் குரலில் பேசி ரூ.40 லட்சம் அபேஸ் நைஜீரிய வாலிபர் மும்பையில் கைது: பலரிடம் கைவரிசை காட்டியது அம்பலம்


சென்னை: பேஸ்புக் மெசஞ்சரில் சென்னை தொழிலதிபரிடம் பெண் குரலில் பேசி ரூ.40 லட்சம் அபேஸ் செய்த நைஜீரிய வாலிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மும்பையில் கைது செய்தனர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப் (48). இவர், ராயல் டிரேடிங் என்ற பெயரில் மருந்து பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் தொழில் தொடர்பான தகவல்களை பதிவு செய்து வந்தார். அந்த பதிவுகளை பார்த்த லண்டனை சேர்ந்த எலிசபெத் என்ற பெண், மெசஞ்சர் மூலம் ஜோசப்பை தொடர்பு கொண்டு, லண்டனில் மருந்து பொருட்கள் விற்பனை நிலையம் வைத்துள்ளதாக அறிமுகமானார்.

பின்னர் அவர், ‘‘மும்பையில் ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் ‘போலிக் ஆயில்’ கிடைக்கிறது. ரூ.40 லட்சம் மதிப்புள்ள அந்த ஆயிலை வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் வாங்கி எனக்கு அனுப்பினால், ரூ.2 லட்சம் கமிஷனுடன் சேர்த்து ரூ.42 லட்சமாக தருவதாக கூறியுள்ளார். வாரத்திற்கு ரூ.2 லட்சம் கமிஷன் கிடைக்கிறதே என்ற ஆசையில் ஜோசப் ஒவ்வொரு வாரமும் அந்த ஆயிலை வாங்கி அனுப்புகிறேன் என்று எலிசபெத்திடம் உறுதியளித்து, ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார்.
பிறகு, மும்பையில் உள்ள சுனிதா என்ற பெண்ணை தொடர்புகொண்டால், உடனடியாக போலிக் ஆயில் கிடைக்கும். அதை வாங்கி எனக்கு அனுப்ப வேண்டும் என்று எலிசபெத் கூறியுள்ளார்.

அதன்படி, ஜோசப் மெசஞ்சர் மூலம் மும்பையில் உள்ள சுனிதாவிடம் பேசியுள்ளார். அப்போது, சுனிதா தனது வங்கி கணக்கில் ரூ.40 லட்சம் செலுத்தினால் உங்களுக்கு ‘போலிக் ஆயில்’ உடனடியாக அனுப்புவேன், என தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜோசப், வனிதாவின் வங்கி கணக்கில் ரூ.40 லட்சத்தை செலுத்தியுள்ளார். ஆனால், ஆயில் வந்து சேரவில்லை. இதையடுத்து, சுனிதாவை தொடர்புகொண்டபோது, எந்த தகவலும் இல்லை. இதனால், லண்டனில் உள்ள எலிசபெத்தை தொடர்புகொண்ட போது அவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோசப் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஜோசப் பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது, மும்பையில் இருந்து பேசிய நபர், மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை சென்று அம்மாநில போலீசாரின் உதவியுடன் நைஜீரிய நாட்டை சேர்ந்த கிறிஸ்டோபர் வில்மர் என்பவரை கைது செய்தனர். இவர், இவர்தான் லன்டன் எலிசபெத் மற்றும் சுனிதா போல் பெண் குரலில் பேசி, தொழிலதிபரிடம் ₹40 லட்சம் மோசடி செய்ததும், இதுபோல் நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது. சென்னையில் மட்டும் 4 பேரிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நைஜீரிய வாலிபர் கிறிஸ்டோபர் வில்மரை கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Nigerian ,Mumbai ,businessman ,Chennai ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...