×

உடல் எடை குறைய காத்திருப்பது அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் நம்முடைய உணவுப் பழக்கங்கள் அனைத்தும் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. விளைவு உடல் பருமனில் ஆரம்பித்து பலவித பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் நாளடைவில் பெரும்பாலான சதவிகிதத்தினர் உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். இதை உணர்ந்து அவர்கள் தங்களின் உடலை என்றும் ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு ஏதாவது ஒரு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் மதுரையை சேர்ந்த சுரேஷி. இவர் மதுரையில் மோக்ஷா என்ற பெயரில் ஃபிட்னெஸ் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். ஃபிட்னெஸ் ஒருவருக்கு எவ்வளவு அவசியம் என்பதைப் பற்றி விளக்கம் அளிக்கிறார்.

‘‘நான் சின்ன வயசில் குண்டாகத்தான் இருந்தேன். பிறந்தது, படிச்சது எல்லாம் பரமக்குடி என்றாலும் என் கணவரின் ஊர் மதுரை என்பதால், அங்கு செட்டிலாயிட்டேன். ஏற்கனவே எனக்கு உடல் பருமன் பிரச்னை இருந்தது. அது மேலும் நான் கருத்தரித்த போது அதிகரித்தது. கிட்டத்தட்ட 40 கிலோ எடை கூடியது. இதனால் பிரசவத்தின் பிறகும் நான் பல சிரமங்களை சந்தித்தேன். என்னால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியவில்லை. உடல் ஒத்துழைக்க மறுத்தது. தலைவலியால் அவதிப்படுவேன். சருமம் கருப்பானது. நடக்கக்கூட சிரமப்பட்டேன். அது எனக்குள் ஒரு பெரிய பயத்தைக் கொடுத்தது.

என் குழந்தை வளரும் போது, என்னால் அவளை கவனமாக பார்த்துக் கொள்ள முடியாமல் போயிடுமோன்னு அச்சம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. அதுவே எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து ஆலோசனை கேட்டபோது, அனைவரும் சொன்ன ஒரே விஷயம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதுதான். அதனால நான் என்னுடைய எடையை குறைக்க முடிவு செய்தேன். முதலில் யுடியூப்பில் பார்த்து சில உடற்பயிற்சியினை செய்ய ஆரம்பிச்சேன். அதற்கு பலன் கிடைச்சது, ஆறே மாசத்தில் சுமார் 40 கிலோ எடையினை குறைச்சேன்” என்றவர், இதனை பயிற்சி அளிக்க ஆரம்பித்தது குறித்து விவரித்தார்.

‘‘என்னுடைய உடல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினைப் பார்த்து பலரும் ‘என்ன செய்தாய், எப்படி எடையை குறைத்தாய், எங்களுக்கும் ஆலோசனை கொடு’ன்னு கேட்டாங்க… நான் யுடியூப் பார்த்துதான் குறைத்தேன். ஆனால், அது எல்லோருக்கும் செட்டாகும்னு சொல்ல முடியாது. அதே சமயம் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால், அதற்கு என்னுடைய தகுதியினை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பதான் முறையாக கற்றுக் கொடுக்க முடியும். அதனால் சென்னைக்கு சென்று யோகா பயிற்சியினை மேற்கொண்டேன். ஆனால், மற்றவர்களுக்கு எப்படி சொல்லித் தருவது என யோசனையாக இருந்தது. ஒரு தனிப்பட்ட மையம் அமைக்க என்னிடம் அப்போது போதிய வசதி இல்லை.

அதனால் அதற்கான வருமானத்தை ஏற்படுத்த நினைச்சேன். எனக்கு தெரிந்தவர்கள் மூலம் யோகாசனப் பயிற்சியினை அவர்கள் வீட்டிற்கு சென்று சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அதில் கொஞ்சம் பணம் சேர்ந்தது. அதைக் கொண்டு சிறிய அளவில் பயிற்சி மையத்தை துவங்கினேன். ஆனால், அதில் பல பிரச்னைகள் இருந்தது. பயிற்சி மையம் சிறிய இடம் என்பதால், போதிய வசதி இல்லை. ஏ.சியும் இல்லை. இதனால் வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

எல்லாவற்றையும் விட என்னால் முறையாக பயிற்சி கொடுக்க முடியும்னு யாருக்கும் நம்பிக்கை வரல. என்னுடைய அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள எனக்கு மூன்று மாசமாச்சு. அதன் பிறகு நான் ஒருவரை தொடர்ந்து மற்றவர் சேர்ந்தாங்க. இதற்காக நான் பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்யவில்லை. ஓரிரு மாசத்தில் என்னுடைய மையம் பற்றி தெரிந்து கொண்டு பயிற்சி எடுக்க முன் வந்தார்கள். யோகாவினைத் தொடர்ந்து நியுட்ரிஷன் மற்றும் உடற்பயிற்சி குறித்தும் படிச்சேன். இதன் மூலம் யோகா மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஆரோக்கிய உணவுப் பழக்கத்தையும் அறிமுகம் செய்தேன். அப்படித்தான் ஒரு முழுமையான பயிற்சி மையமாக மோக்ஷா உருவானது” என்றவருக்கு கோவிட் காலம்தான் அவரின் உழைப்புக்கான முழு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

‘‘கோவிட் தொற்றினால், முழு அடைப்பு காரணமாக பயிற்சி மையத்தினை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் வீட்டை விட்டு யாராலும் வெளியேற முடியாத சூழல். இதனால் அவர்களால் உடற்பயிற்சியினை மேற்கொள்ள முடியவில்லை. அதற்காக நான் என் வாடிக்கையாளர்களை கைவிட முடியாது என்பதால், ஆன்லைன் முறையில் பயிற்சி எடுத்தேன். என்னுடைய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அவர்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலர் பயிற்சியில் சேர்ந்தார்கள்.

மதுரை மட்டுமில்லாமல் மற்ற நகரம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் பலர் பயிற்சி எடுக்க முன் வந்தார்கள். ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு வசதியான நேரத்தில் செய்யலாம் என்பதால், அது எனக்கு ப்ளசாக அமைந்தது. கொஞ்சம் தளர்வு ஏற்பட்ட பிறகு மூடிய என் பயிற்சி மையத்தினை மீண்டும் திறந்தேன். இப்போது ஒரு பெரிய அளவில் ஸ்டுடியோவை துவங்கி அதில் ஆன்லைனில் மட்டுமில்லாமல் நேரடி பயிற்சியும் அளித்து வருகிறேன்” என்றவர், ஜிம்மில் பயன்படுத்தும் உபகரணங்களை தவிர்த்து, ஒருவரின் உடலைக் கொண்டே அவர்களை ஃபிட்டாக மாற்றி வருகிறார்.

‘‘பொதுவாக ஜிம்மில் சேர்ந்தால் அங்கு டம்பில்ஸ், வெயிட் லிஃப்டிங் போன்ற பயிற்சிகள் இருக்கும். நான் அதனை பெரிய அளவில் பயன்படுத்தாமல், ஒருவரின் உடலைக் கொண்டே அவர்களுக்கான பயிற்சி அளித்து அதன் மூலம் எடையினை குறைத்து ஃபிட்டாக மாற்றுகிறேன். உபகரணங்கள் இல்லாமல் இயற்கை முறையில் பயிற்சி அளிப்பதால், அவர்களின் உடல் அழகாக வளைந்து கொடுக்கும்.

நம்முடைய உடல் மேஜிக் நிறைந்தது. நாம் அதற்கு ஒரு பயிற்சி கொடுக்கும் போது, அதை ஏற்றுக்கொண்டு, அதன்படி செயல்பட ஆரம்பிக்கும். இதனால் உடல் எடை குறைந்து லேசான உணர்வு ஏற்படும். தசைகள், எலும்புகள் வலுவாகும். இங்கு பெரும்பாலும் ப்ளோர் சார்ந்த உடற்பயிற்சிகள், ஸ்ட்ரெச் ஸ்க்வாட், பிளாங்க்ஸ் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறோம். இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் எங்களிடம் பயிற்சி எடுத்துள்ளனர். இந்த உடற்பயிற்சியால் உடல் எடையினை மட்டுமில்லாமல், தைராய்டு, பி.சி.ஓ.டி. ஹார்மோன் பிரச்னைகள், மன அழுத்தம், இயற்கை முறையில் கர்ப்பம் தரித்தல் போன்ற பல பலன்களை பெண்களால் பெற முடியும்” என்றவர், மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பற்றி விவரித்தார்.

‘‘பொதுவாக உடல் எடையை குறைக்க மிகவும் கடினமான உடற்பயிற்சியினை மேற்கொள்கிறார்கள். பலர் எதையும் சாப்பிடாமல் பட்டினி இருக்கிறார்கள். அப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், இங்கு ஒரே பயிற்சியினை நாங்க செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் மாறும். முதல் நாள் முழு ஸ்ட்ரெச் இருக்கும். அடுத்த நாள் வயிற்றுக்கான பயிற்சி, மறுநாள் உடலின் மேல் பகுதி. இடுப்புப் பகுதி என வாரத்தில் ஐந்து நாட்களும் பயிற்சியுண்டு. அதோடு ஒரு உணவினை எப்படி சாப்பிடலாம்னு அறிவுரை வழங்குகிறோம். இதன் மூலம் எந்த உணவினையும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

அதே சமயம் அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இதற்காக உங்களுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. டயட் உணவு என்றாலும் வீட்டிலேயே சுவையாகவும் விதவிதமாகவும் சமைத்து சாப்பிடலாம். ஆரம்பத்தில் நான் மட்டுமே பயிற்சி அளித்து வந்தேன். இப்போது என்னிடம் பயின்ற பெஸ்ட் மாணவிகள் என் மையத்தில் பயிற்சி அளிக்கிறார்கள்.

நிறைய பேர் உடல் எடையை குறைப்பது இன்ஸ்டன்ட் செயல் என்று நினைக்கிறார்கள். உடல் எடை குறைய நாம் நேரம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று மாதம் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டால்தான் உடல் எடையில் மாற்றம் காண முடியும். என் உடல் எடையை குறைக்க ஆறு மாசமானது. மேலும், இது ஒவ்வொருவரின் உடல் அமைப்பிற்கு ஏற்ப மாறுபடும். அதனால் பொறுமையாக செயல்பட்டால் கண்டிப்பாக மாற்றத்தை உணர முடியும். இங்கு உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் அவர்களின் மனதும் ஆரோக்கிய முறையில் மாற்றி அமைக்கிறோம். அதுதான் எங்களின் சக்சஸ் ரகசியம். தினமும் 30 நிமிடம் கண்டிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் மனதில் பதிய வைத்தாலே போதுமானது. அவர்களால் அதனை செய்ய முடியாமல் இருக்க முடியாது. கண்டிப்பாக இதற்கான நேரத்தினை ஒதுக்கிடுவார்கள்.

உடற்பயிற்சி மட்டுமில்லாமல் நீச்சல், சைக்கிளிங், வாக்கிங் போன்ற பயிற்சியும் மேற்கொள்ளலாம். ஒரு பயிற்சி ஆரம்பித்த பிறகு அதன் தாக்கம் 15 நாட்களுக்குப் பிறகுதான் தெரியும். அதன் பிறகு உணவில் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக நீங்க 20 வருஷம் முன் இருந்த எனர்ஜியினை பெற்றது போல் உணர்வீர்கள். அந்த இடத்தினை அடைய கொஞ்சம் பொறுமை அவசியம்” என்றார் சுரேஷி.

தொகுப்பு: ரித்திகா

 

Tags : Kumkum ,
× RELATED வாழ்க்கை முறை மாற்றத்தால் அதிகரித்து வரும் கல்லீரல் புற்றுநோய்