×

பூண்டி கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

கோவை: கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை மீதுள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க, ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபாடு செய்வது வழக்கம். இதனிடையே அப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை ஆண் காட்டு யானை உணவு தேடி அடிக்கடி கோயில் பகுதிக்கு வருவது வழக்கம்.இந்த நிலையில் விஜயதசமி பண்டிகையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பூண்டி கோயில் பகுதிக்கு வந்தது.

பின்னர் கோயிலுக்குள் காட்டு யானை நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானையை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்போ, பொருட்கள் சேதமோ ஏற்படவில்லை எனவும், தொடர்ந்து அந்த யானையை கண்காணித்து விரட்டும் பணியில் ரோந்து குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே ‘‘ஓடுங்க, ஓடுங்க. திரும்பி பார்க்காதீங்க. ஓடுங்க…’’ என யானை வருவதைப் பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Poondi temple ,Coimbatore ,Swayambhu Linga ,Velliangiri hill ,Poondi ,Poondi Lord Temple ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு