×

கரும்பு டன்னுக்கு ரூ.4,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும்

தஞ்சை, டிச. 25: கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டுமென தஞ்சையில் காணொளி காட்சி மூலம் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சையில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது: தோளகிரிப்பட்டி கோவிந்தராஜ்: கரும்பு விவசாயிகளுக்கு நடப்பு பருவத்தில் சாகுபடி செய்வதற்கு நேரடியாக டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகை ரூ.275யை வங்கியில் செலுத்த வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கழிவுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500யை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லை.

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000ஆக உயர்த்தி தர வேண்டும். வல்லத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தை புதிதாக கட்டித்தர வேண்டும். வேங்கராயன்குடிகாடு வைத்தியலிங்கம்: வேங்கராயன்குடிகாடு, அதினாம்பட்டு, கொ.வல்லுண்டாப்பட்டு, நா.வல்லுண்டாப்பட்டு, சூரியப்பட்டி, நாஞ்சிக்கோட்டை, வடக்குப்பட்டி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்த நெல் மூட்டைகளை பிற பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்று பல நாட்கள் காத்திருந்து விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போது சம்பா, தாளடி அறுவடை பணி துவங்கிய நிலையில் வேங்கராயன்குடிகாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

திருவோணம் சின்னதுரை: தொடர் மழையால் நிலக்கடலை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நிலக்கடலை வயல்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை ராஜாராமலிங்கம்: கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட தென்னை மரத்துக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் தொகை பொறுத்தமற்றது. தென்னை பராமரிப்பு செலவை 2 ஆண்டுகளாக வழங்கவில்லை. மதுக்கூர் சந்திரன்:  தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.

கலெக்டர் கோவிந்தராவ் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 1,35,147 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை மற்றும் சம்பா பருவத்துக்கு 1,757 மெட்ரிக் டன் நெல் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் குறுகியகால நெல் விதைகள் 670 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்துக்கு தேவையான யூரியா 12,756 மெ.டன், டிஏபி 3,133 மெ.டன், பொட்டாஷ் 8,214 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 7,297 மெ.டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் கரும்பு, தென்னை, எண்ணெய்பனை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள் 4,560 எக்டேர் பரப்புக்கு ரூ.1,869 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் 120 எக்டேர் நிலத்தை மேம்பாடு செய்து ரபி பருவத்தில் உளுந்து, எள் சாகுபடி மேற்கொள்ள 11.48 லட்சம் இலக்காக பெறப்பட்டு 12 வட்டாரங்களில் பயனாளிகள் தோ்வு முடிந்து உழவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் 2020- 2021ம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் (நெல்-ஐஐ) பயிருக்கு 1,17,969 விவசாயிகள் 3,26,819 ஏக்கர் பரப்பில் காப்பீடு செய்துள்ளனர். 2019- 20ம் ஆண்டு காரீப் பருவத்துக்கு 6,851 விவசாயிகளுக்கு ரூ.6.680 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

2019- 20 ரபி பருவத்துக்கு 1,61,498 விவசாயிகளுக்கு ரூ.74.635 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. வங்கி கணக்கு விவரம் தவறுதலாக உள்ள நபர்களுக்கு தற்போது சரியான வங்கி கணக்கு விவரம் பெறப்பட்டு இழப்பீட்டுத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை மூலம் 2020-2021ம் ஆண்டுக்கு தஞ்சை மண்டலத்துக்கு பயிர் கடன் இலக்காக ரூ.344 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 1.4.2020 முதல் 17.12.2020 வரை ரூ.297.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் சாகுபடி பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் நடப்பாண்டு காரீப் பருவம் 2020- 2021க்கு 1.10.2020 முதல் குறுவை பட்டம் துவங்கியுள்ள நிலையில் 300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தற்போது 4 வட்டங்களில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் விரைவு (தட்கல்) விவசாய மின் இணைப்பு (2019-20ம் ஆண்டு) வழங்கல் திட்டத்தின்கீழ் விவசாய மின் இணைப்பு வேண்டி பதிவு செய்துள்ள 1,366 விண்ணப்பதாரர்களில் 915 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவு விவசாய மின் இணைப்பு (2020-21ம் ஆண்டு) வழங்கல் திட்டத்தின்கீழ் விவசாய மின் இணைப்பு வேண்டி 1,571 விண்ணப்பதாரா–்களில் 94 பேருக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபா்களுக்கு புதிய மின்மாற்றி அமைத்து விரைவில் மின் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் காணொளி காட்சி மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 99 மனுக்களுக்கும் பதில் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

கண்களில் கருப்புத்துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு
கும்பகோணத்தில் காணொளி மூலம் நடந்த குறைதீர் கூட்டத்தில் கும்பகோணம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து பங்கேற்ற விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் தலைமையில் கண்களில் கருப்பு துணிகளை கட்டி கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலக வாசலில் நின்று கோஷங்களை எழுப்பினர். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...