×

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் பணிகளை கலெக்டர் ஆய்வு

குளித்தலை, டிச.25: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ளது சிவதலங்களில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில். இக்கோயிலில் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல 1,017 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்நிலையில் குடிபாட்டுக்காரர்கள், பொதுமக்கள் ரத்தினகிரீஸ்வரரை தரிசிக்க வரும்பொழுது முதியவர்கள், சிறுவர்கள் மலைஉச்சிக்கு செல்வது மிக சிரமமாக இருந்து வந்தது. இந்நிலை கருதி அப்போதைய திமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கத்திடம் பொதுமக்கள், பக்தர்கள் கம்பிவட ஊர்தி ரோப் கார் தேவை என கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற திமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் இந்து அறநிலையத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு குளித்தலை தொகுதி அய்யர் மலைக்கு பக்தர்கள் கோரிக்கையை ஏற்று ரோப்கார் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

அக்கோரிக்கையை முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பரிந்துரை செய்து அதற்கான உத்தரவு பெறப்பட்டது. அதன்பிறகு முதன்முதலில் இந்து அறநிலையதுறை சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் வழங்கிய ரூ.2 கோடி ஆக மொத்தம் 4 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 2.2.2011 அன்று அப்போதைய அறநிலையதுறை அமைச்சர் முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்றது ரோப்கார் திட்டப்பணி தொடங்கும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்று அடிவாரத்திலும் கட்டிடம் கட்டப்பட்டு அடிவாரத்தில் இருந்து உச்சிமலைக்கு செல்லும் வகையில் ரோப் காருக்கான கம்பி வடங்களும் வந்து சேர்ந்தன. அதனால் பக்தர்களும், ரோப்கார் இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் அய்யர்மலைக்கு வந்தபொழுது ரோப்கார் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன் பிறகு சித்திரை தேர் திருவிழாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் வரவில்லை. செப்டம்பர் மாதம் எனக் கூறினார்கள் வரவில்லை, டிசம்பர் எனக்கூறினார்கள். தற்போது பணி முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி நேற்று அய்யர்மலை வந்து ரோப்கார் திட்டத்தினை ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் இந்த ரோப்கார் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. ஏன் இவ்வளவு தாமதம் என இந்து அறநிலைத் துறை அதிகாரிகள், ரோப்கார் திட்ட ஒப்பந்தகாரர் ஆகியோரிடம் கேட்டறிந்தார். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். பின்னர் கலெக்டர் காலம் கடத்துவதால் ரோப்கார் திட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் பழுதாகி விடாதா என கேள்வி கேட்டார். இதற்கு அதிகாரிகள் மவுனம் சாதித்தனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் ரோப்கார் திட்ட பொறியாளரும், இந்து அறநிலையத்துறை பொறியாளரும் இணைந்து ஆலோசனை நடத்தி இந்த ரோப்கார் திட்டப்பணி எத்தனை நாட்களில் முடியும், அதன்பிறகு சோதனை ஓட்டம் எத்தனை நாட்களில் செயல்படுத்தப்படும் என்ற ஒரு திட்ட வடிவமைப்பு தயார் செய்து அறிக்கையாக கொடுங்கள்.

இத்திட்டத்தினை முதல்வர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதனால் முனைப்போடு செயல்பட்டு அறிக்கை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தாமதமானால் இதற்கான ஒப்பந்த நிறுவனமே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரித்து சென்றார். இறுதியாக ஒன்று தெரியவருகிறது எப்படியும் யார் இந்த திட்டத்திற்கு யார் அடிக்கல் நாட்டினார்களோ அவர்களே இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்ற சூழ்நிலையில் தான் இருக்கிறது என திட்டவட்டமாக தெரிய வருகிறது. அதனால் என்ன தான் ரோப்கார் பணியை முடுக்கி விட்டாலும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் முடியாத சூழ்நிலை என தெரியவருகிறது. இதனால் பக்தர்களுக்கு ஏமாற்றமே. மாவட்ட ஆட்சியர் ஆய்வின்போது கோயில் செயல் அலுவலர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,ropecar ,Ayyarmalai Rathinagriswarar Temple ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...