×

பால் வியாபாரியிடம் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது மேலும் 3 பேருக்கு வலை தண்டராம்பட்டு அருகே வீடு புகுந்து தாக்கி

தண்டராம்பட்டு, டிச.25: தண்டராம்பட்டு அருகே வீடு புகுந்து பால் வியாபாரியை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்துச்சென்ற வழக்கில் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(34), பால் வியாபாரி. இவரது மனைவி அனிதா(30), கீழ்செட்டிப்பட்டு ஊராட்சி மன்ற துணைத்தலைவர். ராஜா, அதே கிராமத்தில் வயல் பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி நள்ளிரவு ராஜா வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு 9 பேர் கொண்ட முகமூடி கும்பல் உள்ளே புகுந்து ராஜாவை இரும்பு ராடால் சரமாரி தாக்கியது. பின்னர் அவரது குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 15 சவரன், 400 கிராம் வெள்ளி, ₹25 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்பி அரவிந்த் உத்தரவின்பேரில் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, எஸ்ஐக்கள் வீரமணி, சிவசங்கரன், முத்துசாமி ஆகியோரது தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முகமூடி கும்பலை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய கள்ளக்குறிச்சி தாலுகா வெலம்பாவூர் லட்சுமணன் (22), புரசப்பட்டு கிரி(21), திருவெண்ணெய்நல்லூர் தாலுகா ஏமக்கூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(21), ஆரணி தாலுகா ஆகாரம் கிராமத்தை பாஸ்கர்(26), கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் ரத்தினகுமார்(28), திருநெல்வேலி மாவட்டம் மேலப்புலியூர் ஜெயசெல்வம்(27) ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடிவருகின்றனர்.
விசாரணையில், ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இந்த கும்பல் சிறையில் இருந்தபோது கூட்டாளிகளாக மாறினர். சிறையில் இருந்து வெளியே வந்ததும், ஊருக்கு வெளியே தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து, இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று சாத்தனூர் அணையை சுற்றிப்பார்க்க சென்ற இந்த கும்பல், வழியில் ஊருக்கு வெளியே இருந்த பால் வியாபாரி வீட்டை நோட்டமிட்டதும், நள்ளிரவு வீடு புகுந்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

Tags :
× RELATED திருவாசகத்தை சுமந்தபடி சிவனடியார்...