×

பால் உற்பத்தி மேலாளர் வாக்குமூலத்தை தொடர்ந்து பணி மாறுதலான ஆவின் பொதுமேலாளர் கைது வேலூர் விஜிலென்ஸ் போலீசார் அதிரடி

வேலூர், டிச.25:வேலூரில் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பால் உற்பத்தி மேலாளர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பணியிட மாறுதலில் சென்ற திருநெல்வேலி ஆவின் பொதுமேலாளரையும் விஜிலென்ஸ் போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சொரக்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன்(50). இவர் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து அங்குள்ள பால் பண்ணை கிடங்கில் ஒப்படைப்பார். இதற்காக ஒரு லிட்டர் பாலுக்கு 40 பைசாவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முருகையனுக்கு கடந்த 2019ம் ஆண்டு வரை ₹1.91 லட்சம் தொகையை வழங்காமல் வேலூர் ஆவின் நிறுவனம் நிலுவையில் வைத்துள்ளது. இதுகுறித்து, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி மேலாளர் ரவியிடம், சில நாட்களுக்கு முன்பு முருகையன் கேட்டுள்ளார். அதற்கு ரவி, ‘காசோலை வழங்க ₹50 ஆயிரம் தரவேண்டும்’ எனக்கேட்டுள்ளார்.

இதுகுறித்து முருகையன், வேலூர் விஜிலென்ஸ் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் முருகையன், ரவியிடம் ₹50 ஆயிரத்தை கொடுத்தபோது விஜிலென்ஸ் போலீசார், ரவியை கைது செய்தனர். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது ரவி, ‘வேலூர் ஆவின் பொதுமேலாளராக பணியாற்றி சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி ஆவின் அலுவலகத்துக்கு பணியிடமாறுதலில் சென்ற கணேசா தான் பணத்தை வாங்க சொன்னார்’ என தெரிவித்தாராம். இதையடுத்து ரவியிடம் விசாரணை தீவிரமடைந்தது. அப்போது, கணேசாவுக்கு பணத்தை அனுப்பிய அனைத்து விவரங்கள், மற்றும் போன் உரையாடல் உட்பட அனைத்து ஆதாரங்களையும் ரவி, போலீசாரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து திருநெல்வேலிக்கு பணியிட மாறுதலில் சென்ற கணேசாவிடம் விசாரணை நடத்த வேலூர் விஜிலென்ஸ் போலீசார் திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் மாலை விரைந்தனர். அங்கிருந்த கணேசாவை வேலூருக்கு அன்றிரவே அழைத்து வந்து விஜிலென்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவரை நேற்று கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறியதாவது: முருகையனிடம் பணத்தை அப்போது பொதுமேலாளராக இருந்த கணேசாதான் கேட்டிருக்கிறார். அவர் கேட்ட தொகை ₹50 ஆயிரத்தை கொடுக்க முருகையன் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் பொதுமேலாளர் கணேசா பணியிடமாறுதலில் திருநெல்வேலிக்கு சென்றுவிட்டார். இருப்பினும் பணத்தை உற்பத்தி மேலாளர் ரவியிடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். உயர் அதிகாரி தெரிவித்ததால் ரவி பணத்தை வாங்கி கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து முருகையன் பணத்தை ரவியிடம் கொடுத்தார். அதன்பேரில் ரவியை கைது செய்தோம். இதையடுத்து பொதுமேலாளர் கணேசாவை கைது செய்தோம். அவர்தான் முதல் குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2வது குற்றவாளியாக ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : General Manager ,Vellore Vigilance Police ,Aavin ,
× RELATED சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு