அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சிறப்பாசிரியர் காலிப்பணியிட விவரங்களை அனுப்ப வேண்டும்பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வேலூர், டிச. 25:அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சிறப்பாசிரியர் காலிப்பணியிட விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகிய சிறப்பாசிரியர் முறையான நியமனத்தில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த 1ம்தேதி நிலவரப்படி தனி படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளிக்கல்வித்துறை இ-மெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பவேண்டும். இதுதொடர்பாக அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தனி படிவத்தில் உள்ள குறிப்புக்கான காலத்தில் எந்த தேதி முதல் காலியாக உள்ளது என்பதை (ஓய்வுபெற்ற நாள், மாறுதலில் சென்ற நாள், இதர காரணங்கள்) தெளிவாக அனுப்பிவைக்க வேண்டும்.

முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பத்துடன், எந்த காலிப்பணியிடங்களும் விடுபடவில்லை என்ற சான்றுடன், காலிப்பணியிட விவரங்களை அஞ்சல் வழியாகவும் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதில் ஏதும் பிறழ்தல் ஏற்படின் முதன்மைக்கல்வி அலுவலரே முழுப்பொறுப்பேற்க நேரிடும் எனவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>