சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமையும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு

ஊட்டி,டிச.25: சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமையும் இடமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு இந்த 3 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையம் அமையும் இடமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட எஸ்பி சசிமோகன் ஆகிேயார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

 ஆய்விற்கு பின் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு ஊட்டி பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் விதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி கொரோனா கட்டுபாடுகளை பின்பற்றி வாக்கு எண்ணுவதற்கான தேவையான வசதிகள் இம்மையத்தில் உள்ளது.முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது ஊட்டி சப்-கலெக்டர்கள் மோனிகா ரானா, குன்னூர் ரஞ்சித் சிங், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவுசல்யா, தேர்தல் வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>