சொத்தை அபகரித்து மிரட்டுவதாக உடல் நலம் பாதித்த மகனுடன் வந்து எஸ்பி.,யிடம் மூதாட்டி புகார்

ஈரோடு,  டிச. 25: ஈரோடு மாவட்டம் நம்பியூர் தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த  மாரிமுத்து மனைவி காளியம்மாள் (70). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரது  மகன் சோமசுந்தரத்தை (54) ஆம்புலன்சில் அழைத்து வந்து ஈரோடு எஸ்பி.,  அலுவலகத்தில் எஸ்பி., தங்கதுரையிடம் மூதாட்டி அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: எனது கணவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு  இறந்து விட்டார். அதன் பிறகு எனது மாமியார் கருப்பாயி, எனது மகனுடன் வசித்து  வந்தேன். கருப்பாயி சாலைப்பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.

ஓய்வு பெற்ற  பணத்தை வங்கியில் டெபாசிட் செய்திருந்தார். நான் கூலி வேலைகளுக்கு சென்று  மாமியாரையும், உடல் நலம் பாதிக்கப்பட்ட எனது மகனையும் கவனித்து வந்தேன்.  இந்நிலையில், நான் வேலைக்கு போன சமயத்தில் மாமியாரின் உறவினரான சுப்பிரமணி,  மாமியாரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று வங்கியில் டெபாசிட் செய்த  பணம், வீட்டில் இருந்த நகை, வீடு, நிலத்தை அவரது பெயருக்கு எழுதி  வாங்கிக்கொண்டார்.

இது குறித்து நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2015ம் ஆண்டு ஜன.5ம் தேதி புகார் அளித்தபோது, போலீசார் விசாரணை நடத்தினர். அதில்,  சுப்பிரமணி போலீசாரிடம் சொத்து தொடர்பாக எப்போது கேட்டாலும் கையெழுத்து  போட்டு எனது மகனுக்கு எழுதி கொடுப்பதாக வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், தற்போது எனது  மகனின் உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளதால், மருத்துவச் செலவுக்கு கூட பணம்  இல்லாததால், எங்களது சொத்தை விற்பதற்காக சுப்பிரமணியிடம் கையெழுத்து  போடும்படி கேட்டேன். அதற்கு சுப்பிரமணி உன் மகன் இறந்த பின்னர்  கையெழுத்து போடுகிறேன் என்றும், அதன்பின் என்னையும் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, சொத்தை  மீட்டு, தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில்  கூறியிருந்தார்.

Related Stories:

>