×

கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

ஈரோடு, டிச. 25:   ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பால் வெளிமாநில வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  ஈரோடு  கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமைதோறும் மாட்டு  சந்தை கூடும். இந்த சந்தைக்கு வரத்தாகும் மாடுகளை கேரளா, கர்நாடகா,  ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வாங்கி  செல்வது வழக்கம். இதன்படி, இந்த வாரம் கூடிய சந்தையில் கடந்த 3 வாரத்தை  காட்டிலும் மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதனால், வெளி மாநில  வியாபாரிகள் அவர்களுக்கு தேவையான மாடுகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல், தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ்,  மாடுகளை வாங்க ராமநாதபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற  மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்ததால், வரத்தான மாடுகள்  90சதவீதம் விற்பனையானது.  இது குறித்து மாட்டுசந்தை நிர்வாகிகள் கூறியதாவது:  இன்று (நேற்று)  கூடிய சந்தையில் பசு 450, எருமை 250, கன்று 100 என 800 மாடுகள் வரத்தானது.

இதில், பசு மாடு ரூ.30ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30  ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம்  வரையும் விற்பனையானது. மாடுகள் கடந்த வாரத்தை விட கூடுதலாக  வரத்தானது. வெளிமாநில வியாபாரிகளும், விலையில்லா மாடுகள் வாங்கும்  திட்டத்தில் பல்வேறு மாவட்ட பெண்கள் அதிகளவில் வந்து கால்நடை பராமரிப்பு  துறை அதிகாரிகள் முன்னிலையில் வாங்கி சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags : Karungalpalayam ,
× RELATED சாலையை சீரமைக்க கோரிக்கை