×

அரசியல் கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: அரசியல் கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செயத்திற்குறிப்பில்; இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதலின்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகம், கிறிஸ்துவ ஜனநாயக முன்னணி, ஜெபமணி ஜனதா, காமராஜர் தேசிய காங்கிரஸ், மக்கள் சக்தி கட்சி, என் இந்தியா கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்), தமிழக முன்னேற்ற காங்கிரஸ், வளமான தமிழக கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகள் 2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டிற்கான வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கவில்லை.

இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, சம்பந்தப்பட்ட 10 கட்சிகள் தேர்தல் செலவின அறிக்கைகளை உரிய படிவத்தில் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அந்த கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. எனினும், நடவடிக்கைக்கு முன்பாக 10 கட்சிகளுக்கு தங்கள் கருத்தினை தெரிவிக்க ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மூலமாக நேரடி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு சார்வு செய்யப்பட்டுள்ள காரணம் கேட்கும் அறிவிப்பில் (SHOW CAUSE NOTICE) குறிப்பிட்டுள்ள நாளில் எழுத்துப்பூர்வமான அறிக்கை மற்றும் உரிய ஆவணங்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் முன் ஆஜராக வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் கட்சிகளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையெனில், கட்சிகளுக்கு பதிவு செய்வதற்கு எந்த கருத்துகளும் இல்லை என கருதப்பட்டு இறுதி முடிவினை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

Tags : Electoral Commission ,Chennai ,Election Commission ,Election Commission of India ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி