×

போடி ஜிஹெச்சில் போதிய மருத்துவர் இல்லை

*முதலுதவி முடிந்ததுமே தேனிக்கு அனுப்புகின்றனர்
*துணை முதல்வர் தொகுதியில் அவலம்

போடி, டிச. 25: போடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவசர நோயாளிகளை முதலுதவி சிகிச்சை முடிந்துமே தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போடியில் அரசு பொது மருத்துவமனை 1967ம் ஆண்டு திமுக ஆட்சியில் துவக்கப்பட்டு, 53 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு போடியை சுற்றியுள்ள 15 கிராம ஊராட்சிகள், போடிமெட்டு, குரங்கணி, அகமலை உள்பட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் இருந்தும் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தமிழர்கள், மலையாளிகள் என தினந்தோறும் 2000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர்.

மேலும் கொச்சின்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் மலைச்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையாக விளங்கி வருகிறது. 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக ரூ.1 கோடி மதிப்பில் இம்மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, பல பிரிவுகள் கொண்டு வந்து விரிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக உள்நோயாளிகள் பிரிவில் 80 படுக்கைகள் வசதி செய்து தரப்பட்டது. அதன்பின் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இம்மருத்துவமனையின் பிரச்னையை கண்டுகொள்ளவே இல்லை.

இங்கு மருத்துவ அதிகாரி உள்பட 13 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் இருப்பது அதில் பாதியளவுதான். மேலும் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக 2 பெண் மருத்துவர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது அதுவும் ஒருவர் மட்டும்தான் உள்ளார். இதனால் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யவும், பராமரிக்கவும் சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல் பல மருத்துவத்திற்கும் சிகிச்சை அளிக்க ஆட்கள் இல்லாததால் நோயாளிகளை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை தொடர்வதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘துணை முதல்வர் தொகுதி ஜிஹெச்சில் டாக்டர்கள் பற்றாக்குறை நீண்டகாலமாக தொடர்கிறது. இதனால் பலரும் முதலுதவி சிகிச்சை முடித்த கையோடு தேனி ஜிஹெச்சிற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட மருத்துவத்துறை போடி ஜிஹெச்சில் காலியாகவுள்ள 6 டாக்டர் பணியிடங்களை உடனே நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : doctor ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...