மேகமலையில் தனியார் ஆக்கிரமிப்பு விவகாரம்: இருதரப்பையும் அழைத்து வனத்துறையினர் பேச்சுவார்த்தை

வருசநாடு, டிச. 25: மேகமலையில் வனத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் பகுதிகளை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதற்கு வனத்துறையினர் துணை போவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் பால்கண்ணன் தலைமையில் அப்பகுதியினர் மதுரை உதவி வன பாதுகாவலரிடம் புகார் மனு அளித்தனர். அம்மனுவில், மேகமலையில் வனத்துறைக்கு சொந்தமான மண்னூத்து பகுதியி–்ல் தனிநபர்கள் வனத்துறை ஆசியுடன் ஆக்கிரமிப்பு செய்து, விவசாயம் செய்கின்றனர்.

அரசரடி, பொம்முராஜபுரம், இந்திராநகர் மலைக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தேனி, சின்னமனனூர், மதுரை, ஆண்டிபட்டி சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுகின்றனர். மேலும் இக்கிராமங்களுக்கு குடிநீர் பைப் லைன் அமைப்பதை வனத்துறையினர் தடுக்கின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரியுடன் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக மதுரை உதவி வனபாதுகாவலர் ராஜா, மேகமலை உதவி பாதுகாவலர் குகனேஷ், கண்டமனூர் வனச்சரகர் ஆறுமுகம் ஆகியோர்  

மேகமலை வனத்துறை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்,  தனிநபர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மேகமலை வனச்சரக அலுவலர் சதீஷ்கண்ணன் கூறுகையில், ‘மண்னூத்து மலைப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த தனிநபர்கள் மீது ஏற்கனவே வழக்கு போடப்பட்டுள்ளது. தற்போது ஏன் இந்த புகார் மனு வந்தது என்று எனக்கு தெரியவில்லை’ என்றார்.

Related Stories:

>