×

விழா முன்பணம் வழங்காமல் இழுத்தடிப்பு; ஆசிரியர் அதிருப்தி

சிவகங்கை, டிச.25 : ஆசிரியர்களுக்கு விழா முன்பணம் மூன்று ஒன்றியங்களில் வழங்கப்படாதது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பணம் வழங்குவது வழக்கம். அவ்வாறு வழங்கப்படும் பணம் 10 மாத தவணைகளில் பிடித்தம் செய்து அரசு கருவூலத்தில் திருப்பி செலுத்தப்படும்.

ஆனால் இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் 3 ஒன்றியங்களில் மட்டும் விழா முன்பணம் வழங்கப்படவில்லை. இதற்கு வட்டார கல்வி அலுவலர்களின் மெத்தன போக்கே காரணம் என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், திருப்பத்தூர், திருப்புவனம் மற்றும் கல்லல் ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் இதுவரை விழா முன்பணம் வழங்கப்படவில்லை.

ஆனால் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மட்டும் தங்களுக்கான விழா முன்பணத்தை தீபாவளிக்கு முன்னரே பெற்றுவிட்டனர். இது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்த நிலையில் கடந்த ஜூலை மாதமே ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலகத்திற்கும் நிதி ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டு விட்டதாகவும், கூடுதல் நிதி கேட்டு எவ்வித கோரிக்கையும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

தங்களுக்கான விழா முன் பணத்தை இரண்டு மாதங்களுக்கு முன் பெற்றுள்ள நிலையில் தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க மறுப்பது எவ்விதத்தில் நியாயம். முதன்மை கல்வி அலுவலர் இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

Tags :
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை