×

திருப்பரங்குன்றத்தில் புதர்மண்டிக் கிடக்கும் கோயில் தெப்பக்குளம்: தெப்பத்திருவிழா நெருங்கும் நிலையில் கண்டுகொள்ளாத கோயில் நிர்வாகம்

திருப்பரங்குன்றம், டிச. 25: திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நெருங்கும் நிலையில், சுப்பிரமணிய கோயில் தெப்பக்குளம் பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கிறது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடக்கும். இதன்படி, இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் வரும் ஜன.24ல் தெப்பத்திருவிழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் பராமரிப்பின்றி புட்கள் மண்டி கிடக்கிறது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை கோயில் நிர்வாகம் பராமரிப்பதில்லை. ஆண்டுதோறும் தெப்பத்திருவிழாவின்போது, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வலியுறுத்தலுக்கு பின்தான், தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது. இக்குளத்திற்கு திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் இருந்து தண்ணீர் கொண்டு வரலாம். ஆனால், மின்மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

இதனால், பல ஆயிரம் ரூபாய் வீணாகச் செலவாகிறது. இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, இனிவரும் காலங்களில் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் நிரப்பி பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Temple Theppakulam ,Putharmandik ,Thiruparankundram ,administration ,boat festival ,
× RELATED நாகர்கோவில் வடிவீஸ்வரம் கோயில்...