×

திமுக ஆட்சி அமைந்ததும் சந்தையூர்-சாப்டூர் வனப்பகுதி இணைப்புச்சாலை திறக்கப்படும்: கிராம சபைக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் உறுதி

பேரையூர், டிச. 25: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சந்தையூரில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் சேடபட்டி முத்தையா, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தனர். மாவட்ட இளைஞரணி பாண்டிமுருகன், டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன், பேரையூர் நகரச்செயலாளர் பாஸ்கரன், முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூறுகையில், ‘வனத்துறை மூடியுள்ள சந்தையூர்-சாப்டூர் இணைப்புச்சாலையை திறக்க வேண்டும். சந்தையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பேசிய முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, ‘1977ல் நான் எம்எல்ஏவாக இருந்தபோது சாப்டூரிலிருந்து அழகாபுரி வழியாக மலை வரை பாதையும், சந்தையூர் தேன்மலையாண்டி கோயிலிருந்து தார்ச்சாலையும் அமைத்து கொடுத்தேன்.

இடைப்பட்ட 2.5 கி.மீ. வனப்பகுதியாக இருந்தது. நமது தொகுதியில் தற்போது ஜெயித்த அதிமுக அமைச்சரைப்போல் இருந்திருந்தால் எப்போதே இந்த சாலையை ஏற்படுத்தி கொடுத்திருப்பேன். திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் மக்களுக்காக பாடுபடுவன். உங்கள் குறைகளை தளபதி மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைப்பேன்’ என்றார்.மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசுகையில், ‘சாந்தையூர்-சாப்டூர் இணைப்புச்சாலையை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திறக்கப்படும்’ என்றார். இந்தக்கூட்டத்தில் தொழில்நுட்ப அணி பாசப்பிரபு உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chandaiyur-Saptur ,forest link road ,DMK ,Manimaran ,village council meeting ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்