மகாராஷ்டிராவில் இருந்து 5,590 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேனிக்கு வந்தது

தேனி, டிச. 24: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எத்தனை மின்னணு வாக்கு இயந்திரம் தேவை என கணக்கிட்டு, அதனை அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 4 கண்டெய்னர் வாகனங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பல்லவி பல்தேவி தலைமையில் பாஜக வட்ட துணை தலைவர் பாண்டியராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட உறுப்பினர் முனீஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பிஎஸ்பி மாவட்ட தலைவர் தங்கதுரை, இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய குழு உறுப்பினர் சின்னப்பாண்டி,

தேமுதிக ஆனந்த குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்கு இயந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டது.  பின்னர் ஸ்கேனர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்தனர். தொடர்ந்து அவற்றை தேர்தல் பாதுகாப்பு அறையில் வைத்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடைபெறும். மொத்தம் 1730 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 1820 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவி, எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டோம் என்பதை காண்பிக்கும் 2040 விவிபேட் இயந்திரம் வந்துள்ளன.

Related Stories:

>