×

பெரியகுளம் பகுதியில் பொங்கல் கரும்பு அறுவடைக்கு தயார்

பெரியகுளம், டிச. 24: பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, காமாட்சி அம்மன் கோயில், மஞ்சளார், சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கலுக்காக கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் இருந்த கரும்பு விவசாயம் தற்போது சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் சாகுபடியை பாதிக்கு, பாதியாக குறைத்து விட்டனர்.

இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவலால் பெரும்பாலான பண்டிகைகள் கொண்டாடப்படாத நிலையில் தற்போது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் அடுத்து வரும் கரும்பின் முக்கிய பயன்பாடான பொங்கல் பண்டிகைக்கும் அரசு தடை விதித்து விடுமோ என இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு 10 கரும்புகள் உள்ள ஒரு கட்டின் விலை ரூ.300 வரை விலை போன நிலையில் இந்த ஆண்டு உரம் விலை, வேலை ஆட்கள் கூலி, உள்ளிட்ட சாகுபடி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.350க்கு விற்றால்தான் விவசாயிகள் வருவாய் ஈட்டமுடியும். மேலும் இந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பொருட்களில் ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளதால் பொங்கல் கரும்பு விவசாயிகள் சற்று ஆறுதல் அளித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட எந்த ஒரு தடையும் அரசு விதிக்க கூடாது’ என்றனர்.

Tags : area ,Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி