×

நான்கு வழி சாலைக்கு நிலம் கொடுத்தோர் இழப்பீடு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்புவனம், டிச.24: மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012ம் ஆண்டு நிலம் கையகப்படுத்த நான்கு வழிசாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. சிவகங்கை மாவட்ட எல்கையான மணலூரிலிருந்து திருப்பாச்சேத்தி அருகே உள்ள சம்பராயனேந்தல் பகுதி வரை சுமார் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை நான்கு வழிச்சாலைக்கு கொடுத்தனர். ஆணையம் கணக்கெடுத்து ஒரு செண்ட் நிலத்துக்கு குறைந்த பட்சம் ரூ.38 ஆயிரத்திலிருந்து 55ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்தனர். அந்த தொகை 2015ம் ஆண்டு தான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மூன்று வருடங்கள் தாமதத்தால் நிலம் கொடுத்தவர்களுக்கு பெரும் இழப்பும் மன உளச்சலும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து 2015ம் வருட நிலத்தின் மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது. 2015ம் ஆண்டு நில மதிப்பின்படி இழப்பீடு அல்லது தாமதமான மூன்றாண்டுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என நான்கு வழிச்சாலை ஆணையத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை கூட்டமைப்பினர் நடத்தி வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதனால் நிலம் கொ டுத்தோர் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருப்புவனம் தாலுகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. திரவியம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முருகப்பா கூறுகையில், ‘‘2011ம் ஆண்டு நிலத்தை எடுத்து கொண்ட ஆணையம் நான்கு ஆண்டு கழித்து 2015ம் ஆண்டுதான் இழப்பீடு வழங்கியது. நாங்கள் 2015ல் அரசின் நில வழிகாட்டு மதிப்பு அதிகரித்தது. அந்த மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி விட்டோம்.

இதுநாள் வரை எந்த வித அறிவிப்பும் வரவில்லை. விவசாயிகளை தனியாக வரவழைத்து பேசுவதை விடுத்து அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளையும் ஒன்றாக அழைத்துப் பேசி இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் திருப்பாச்சேத்தி முன்னாள் கவுன்சிலர் காத்தமுத்து, காத்தான் , லாடனேந்தல் பாலு, திருப்புவனம் ஈரா, தூதை சந்திரசேகர், ஜெயமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Demonstrators ,road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...