×

நிதி சுமையால் பரமக்குடி நகராட்சி தத்தளிப்பு

பரமக்குடி, டிச.24:  பரமக்குடி நகராட்சியில் ரூ.6 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதால், நகராட்சி நிர்வாகம் நிதி சுமையால் தத்தளித்து வருகிறது. பரமக்குடி நகராட்சியானது 36 வார்டுகளை கொண்டது. இந்த நகராட்சிக்கு மாதம் ரூ. ஒரு கோடியே 30 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், மின்கட்டணம் செலுத்தவும் அத்தியாவசிய தேவைகளுக்கு தேவைப்படுகின்றது. ஆனால், கடந்த 1998ம் ஆண்டிலிருந்து கடை வரி, சொத்து வரி, மாஹால் வரி,லாஜிக்கான வரி, தண்ணீர் வரி உள்பட வரிகள் உயர்த்தப்படாததால் நகராட்சிக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை பொதுமக்கள் முறையாக செலுத்தப்படாமல் ரூ.6 கோடிக்கு மேல் பாக்கியாக உள்ளது. இதனால், நகராட்சி நிர்வாகத்தில் பணிகள் மேற்கொள்ள முடியாமலும் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட முடியாமலும் நகராட்சி திட்ட பணிகளை செய்து முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க முடியாமலும் நகராட்சி நிர்வாகம் திண்டாடி வருகிறது.

நவம்பர் மாத சம்பளம் கூட இன்னும் ஊழியர்களுக்கு வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால், பரமக்குடி நகராட்சி அலள பாதாளத்திற்கு சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை, வரி வசூலும் குறைவாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராமர் கூறுகையில், வரிவசூல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் வணிகர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்த வேண்டும் என ஆணையாளர் ராமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : municipality ,Paramakudi ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை