×

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு

சாயல்குடி, டிச.24:  சாயல்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும், போக்குவரத்து காவலர்களை நியமிக்க எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் சாயல்குடி அமைந்துள்ளதால் போக்குவரத்து மிகுந்த நகராக விளங்கி வருகிறது. இச்சாலையில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்திரிகர்களும் ராமேஸ்வரம், திருப்புல்லானி, தேவிபட்டிணம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதுபோன்று திருச்செந்தூர், கன்னியாகுமரி, குற்றாலம், சபரிமலை செல்வதற்கு ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாலிநோக்கம் அரசு உப்பளம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் சாயல்குடி கடற்கரை பகுதிகளிலிருந்து மீன்களும், கடலாடி பகுதியிலிருந்து மரக்கரிகள், பனை மர பொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது.

மேலும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இந்த வழித்தடத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. தற்போது சபரிமலை, மேல்மருவத்தூர், பழனிமலை சீசன் என்பதால் அதிகமான பக்தர்களின் வாகனங்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள கோயில்களுக்கு வந்து செல்கிறது. இதனால் சாயல்குடி மும்முனை சந்திப்பு முதல் ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி சாலையில் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில் சாலையோரம் தண்ணீர் டேங்கர் டிராக்டர்கள், கடைகளுக்கு பொருட்களை இறக்கும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துகின்றனர். இதனால் பேர்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவசரத்திற்கு மற்ற வாகனங்கள் செல்ல முடியாதநிலை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நிரந்தரமாக இப்பகுதியில் தானியங்கி  சிக்னல்கள், போக்குவரத்து காவலர்களை நியமிக்க எஸ்.பி கார்த்திக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...