×

104 நாடுகளின் 2200 பேர் பங்கேற்பு: உலக பாரா தடகள போட்டிகள் டெல்லியில் கோலாகல துவக்கம்

புதுடெல்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் இன்று துவங்குகின்றன. 12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று துவங்கி, வரும் அக். 5ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 104 உலக நாடுகளை சேர்ந்த 2,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர். இதையொட்டி நேற்று, டெல்லி நேரு ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய அணி வீரர்கள் வீராங்கனைகள், தரம்பீர், பிரீத்தி பால் தலைமையில் அணிவகுத்து சென்றனர். இப்போட்டிகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா துவக்கி வைத்தார்.

ஜப்பானின் கோபே நகரில் கடந்த 2024ல் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்ததை விட 15 போட்டிகள் கூடுதலாக டெல்லி பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடத்தப்பட உள்ளன. மொத்தத்தில் 186 பதக்கங்களுக்காக போட்டிகள் நடைபெறும். இவற்றில், ஆடவருக்காக 101 போட்டிகளும், மகளிருக்காக 84 போட்டிகளும், ஒரு போட்டி இருபாலரும் ஆடும் வகையிலும் நடத்தப்படும். இப்போட்டிகளில் உலகின் முதல் தர விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே நடந்த போட்டிகளில் 308 பதக்கங்களை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற, சுவிட்சர்லாந்து வீராங்கனை கேதரீன் டெப்ரன்னர், டெல்லி போட்டிகளில் பங்கேற்கிறார். இந்தியா தரப்பில் ஆடும் வீரர்களில் ஒருவரான சுனில் அன்டில், பாராலிம்பிக் போட்டிகளில் இரு முறை தங்கம் வென்றவர். ஆடவர் பிரிவு ஈட்டியெறிதல் போட்டியில் அவரே நடப்பு சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : World Para Athletics Championships ,Delhi ,New Delhi ,12th World Para Athletics Championships ,Nehru Stadium ,
× RELATED தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல்...