சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் கலெக்டரிடம் வலியுறுத்தல்

நெல்லை, டிச. 24:  சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென நெல்லை கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டஇணைச் செயலாளர் சிவஞானம் மற்றும் நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு செய்தனர்.  பின்னர் கலெக்டரிடம் அளித்த மனு விவரம்: தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு 38 ஆண்டுகள் ஆன பின்பும், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தரமாக செயல்படுத்தும் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு திட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் என்ற பெயரால் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் என உயர்த்தி வழங்க வேண்டும். பள்ளி சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.  இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories:

>