×

வேலூரில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடி ₹1.81 லட்சத்திற்கான காசோலை வழங்குவதற்காக ₹50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் மேலாளர் கைது

வேலூர், டிச. 24: வேலூரில் ₹1.81 லட்சத்திற்கான காசோலை வழங்குவதற்காக ₹50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் பால் உற்பத்தி மேலாளரை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சொரகொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகையன்(50). இவர் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து அங்குள்ள பால்பண்ணை கிடங்கில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இதற்காக ஒரு லிட்டர் பாலுக்கு ₹40 பைசாவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் முருகையனுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ₹1.81 லட்சம் தொகையை வழங்காமல் வேலூர் ஆவின் நிறுவனம் நிலுவையில் வைத்துள்ளது.

இந்த நிலையில் வேலூர் ஆவின் 2 ஆக பிரிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தனியாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் உற்பத்தி மேலாளர் ரவியிடம், சில நாட்களுக்கு முன்பு முருகையன் ₹1.81 லட்சம் நிலுவை தொகையை வழங்கும்படி கேட்டுள்ளார். அதற்கு ரவி, ‘காசோலை வழங்க ₹50 ஆயிரம் தரவேண்டும்’ எனக்கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து முருகையன், வேலூர் விஜிலென்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி ₹500, ₹2000 ரூபாய் நோட்டுகளை முருகையன், மேலாளர் ரவியிடம் நேற்று காலை வழங்கினார். பணத்தை ரவி வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், விஜயலட்சுமி, விஜய் மற்றும் போலீசார் ரவியை கையும் களவுமாக பிடித்து கைது ெசய்தனர்.

மேலும் அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். ஆவினில் நடந்த லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இந்தாண்டு அரசு அலுவலகங்களான மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பத்திரப்பதிவு, வேலூர் கலெக்டர் அலுவலகம் (முத்திரைதாள் சப் கலெக்டர்), ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்து வாகன சோதனை சாவடி, பேரூராட்சி மற்றும் டாஸ்மாக் கடைகள் உட்பட நேற்று வரை மொத்தம் 18 இடங்களில் திடீரென சோதனை செய்தனர். இதில் 5 இடங்களில் பணம் வாங்கும்போது, கையும் களவுமாக விஜிலென்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடரும் விஜிலென்ஸ் ரெய்டால், ஊழல் செய்து பணம் சேர்த்த அதிகாரிகள் பலரும் விஜிலென்ஸ் ரெய்டு எப்போது வருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

* வேலூரில் இதுவரை ₹4.30 கோடி விஜிலென்ஸில் சிக்கியது
வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கலெக்டர் அலுலவகத்தில் முத்திரைதாள் சப் கலெக்டர் தினகரன், ₹50 லஞ்சம் வாங்கும் போது விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 13ம் தேதி காட்பாடியில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய திடீர் ரெய்டில் மாசுகட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றிய பன்னீர்செல்வம் வாடகை வீடு மற்றும் ராணிப்பேட்டை வீட்டில் நடத்திய சோதனையில் ₹3.50 கோடி மற்றும் 3.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. டாஸ்மாக் கடை, போக்குவரத்து சோதனை சாவடி, திருவலம் பேரூராட்சி, அணைக்கட்டில் விஏஓ என நடத்தப்பட்ட விஜிலென்ஸ் ரெய்டில் இதுவரை ₹4.30 கோடி பணம் மற்றும் 3.6 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Vigilance police ,Vellore ,manager ,Avin ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...